புதுடெல்லி: பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா ) இளம் தலைவர்கள் உரையாடல் 2025 கண்காட்சியை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அப்போது பங்கேற்பாளர்களுடன் அவர் உரையாடினார்.
இளைஞர் விவகாரத் துறை டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டு நாள் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ஐ சனிக்கிழமை வெற்றிகரமாக தொடங்கியது. இந்த விழா, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் ரக்ஷா காட்சே, ஆனந்த் மகேந்திரா, பல்கி ஷர்மா, எஸ், சோமநாத், பவன் கோயங்கா, அமிதாப் கான் மற்றும் ரோன்னி ஸ்க்ரூவாலா ஆகியார் கலந்து கொண்ட அமர்வுடன் தொடங்கியது. பாரம்பரிய மரபுபடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்ட நிகழ்வில் விவேகானந்தரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தேசிய இளைஞர் நல விழாவை 25 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக நடத்தும் பாரம்பரியத்தை உடைப்பதே விக்சித் பாரத் இளைஞர்களுக்கான உரையாடலின் நோக்கம். இது, ஒரு லட்சம் இளைஞர்களை அரசியல் சார்பின்றி அரசியலில் ஈடுபடுத்தவும், விக்சித் பாரதத்துக்கான அவர்களின் எண்ணங்களை யதார்த்தமானதாக மாற்ற ஒரு தேசிய தளத்தை அமைத்து தரும் பிரதமரின் சுதந்திர தின உரையின் அழைப்பினை ஒத்திருக்கிறது.
கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் பத்து கருப்பொருள்களில் பங்கேற்பாளர்களின் கட்டுரைத் தொகுப்பினையும் வெளியிடுகிறார். அவை, தொழில்நுட்பம், நிலைத்தன்மை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளை உள்ளடக்கியது.
பின்பு ஒரு தனித்துவமான சூழலில் இளம் தலைவர்களுடன் பிரதமர் மோடி மதிய உணவு உட்கொள்கிறார். இது அவர்களின் எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் அபிலாஷைகளை நேரடியாக அவருடன் பகிர வாய்ப்பளிக்கிறது.
முன்னதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா இன்று விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் திட்டத்தினை பாராட்டியிருந்தார். இதுபோன்ற தளங்கள் இளைஞர்களிடையே அதிகாரமளித்தல் மற்றும் நம்பிக்கையை வளர்க்கின்றன. தேசத்தைக் கட்டி எழுப்புவதில் அவர்களின் அர்த்தப்பூர்வமான பங்களிப்பை அளிக்க தூண்டுகின்றன என்று தெரிவித்திருந்தார்.