‘வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்’ என்று எல் அண்ட் டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியிருந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை.
இதற்கு பலர் தரப்பினர்களிடம் எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டிருக்கும் நிலையில், ‘வாரத்திற்கு 90 மணி நேர வேலை’ என்பதைப் பற்றி ஹெச்.ஆர்களின் கருத்து கேட்டோம். அவர்கள் கூறியதாவது…
ஹெச்.ஆர் கன்சல்டன்ட் மற்றும் அட்வைசர் வசந்தகுமார்
“என்னுடைய 40 ஆண்டுகால அனுபவத்தில் தொழிற்சாலை, நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் என அனைத்து விதமான நிறுவனங்களையும் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் சுரங்கம் சட்டம், தொழிற்சாலை சட்டம், தோட்ட தொழிலாளர்கள் சட்டம் என்று மூன்று விதமான சட்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்று சட்டங்களிலும் 48 மணி நேரம் மட்டுமே ஒருவர் வேலை பார்க்க வேண்டும் என்றிருக்கிறது.
இதனால், தொழிலாளர்களுக்கு ஓய்வு, சிறந்த உற்பத்தி திறன், உடல் மற்றும் மன நலம் என பெரிய பெரிய பலன்கள் இருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் 40 – 45 வயதுகளிலேயே மனிதர்களுக்கு உடல்நல பாதிப்புகள் வர தொடங்கிவிட்டன. மேலும், அனைத்து மனிதர்களுக்கும் குடும்பம் என்பது மிக முக்கியமான ஒன்று.
ஆக, உடல் மற்றும் மன நலம், குடும்பங்களை பார்த்துகொள்வது, ஓய்வு ஆகியவை 90 மணி நேர வேலையில் சாத்தியப்படாது. இது நடைமுறைக்கும் ஒத்துவராது.
ஒரு நிறுவனத்தின் நிறுவனர், தலைவர்கள் 90 மணி நேரம் மட்டுமல்லாமல், எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். அவர்கள் வாங்கும் சம்பளம் அப்படி. ஒருவேளை, தொடர் வேலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், பெரிய மருத்துவமனைகளில் அவர்களால் சிகிச்சை எடுத்துகொள்ள முடியும். ஆனால், சாதாரண தொழிலாளர்களுக்கு அது சாத்தியப்படாது.
இப்போது ஒவ்வொருவரும் தங்கள் நிறுவனத்திற்கு செல்லவே மிக நீண்ட பயணம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. இதுவே பெரிய சோர்வை தந்துவிடும். இத்துடன் 90 மணி நேரம் வேலை சேர்ந்தால் உடல்நலம், குடும்ப நலன் என அனைத்தும் பாதிக்கப்படும்.
இயந்திரங்களுக்கு கூட மெயின்டெனன்ஸ் நேரம் தேவைப்படுகிறது. அப்படி இருக்கையில், மனிதர்களுக்கு அந்த ஓய்வு நேரம் வேண்டாமா?
நீண்ட நேரம் பணிப்புரிகையில் செயல் திறனும் பாதிக்கப்படும். இதனால், நிறுவனத்தின் உற்பத்தி குறையும்”.
மனிதவள நிபுணர் டாக்டர் இஸ்ரேல் இன்பராஜ்
’90 மணி நேரம் வேலை’ என்று சொல்லும்போது மனிதனின் வாழ்க்கையை புரிந்துகொள்ள வேண்டும். பணி வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்று மனிதனுக்கு மூன்று பக்கங்கள் உண்டு. இந்த மூன்றுமே மனிதனுக்கு மிக முக்கியம். அப்போது தான் அவன் நன்றாக இயங்க முடியும்.
மீதி இரண்டு வாழ்க்கையையும் விடுத்து, பணி வாழ்க்கையை மட்டும் வாரம் முழுவதும் பார்த்தால் அவனால் எப்படி நன்கு இயங்க முடியும்?
பொதுவாகவே, ஒரு மனிதனுக்கு ஒரு பணியை தொடங்கும்போது இருக்கும் செயல் திறன், மனநிலை போன்றவை முடியும்போது இருக்காது. அதுப்போலவே, திங்கட்கிழமை இருக்கும் திறன் வாரக் கடைசி இருக்காது. இந்த நிலையில், பணி நேரம் அதிகரிக்கும்போது செயல்திறன் நிச்சயம் பாதிக்கப்படும்.
பொருளாதாரத்தை தாண்டி, மனிதனுக்கு குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை உண்டு. இப்போதே, ‘என் அப்பா வீட்டுல இருக்கமாட்டிங்குறார்’ என்று பல குழந்தைகளுக்கு வருத்தம் உண்டு. இது 90 மணி நேரமாக உயர்த்தும்போது என்ன ஆகும் என்று யோசித்து பார்க்க வேண்டும்.
ஒரு வேலையை செய்யும்போது அதன் மீது ஆர்வம் இருந்தால் அவர்களே அதிக நேரம் வேலை பார்ப்பார்கள்…நல்ல உற்பத்தியும் இருக்கும். இதை ஏற்படுத்தாமல், வேலை நேரத்தை மட்டும் அதிகரித்தால் செயல்திறனும், ஈடுபாடும் குறையும்”.