சென்னை: திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் சென்னையில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. பொங்கல் திருநாள் நெருங்கிவிட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சென்னையில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம் தொகுதி திமுக சார்பில் பொங்கல் விழா வியாசர்பாடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், எபினேசர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி மற்றும் தொண்டர்களுடன் இணைந்து பொங்கலிட்டார். தொடர்ந்து, 3 தொகுதிகளின் பாக முகவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
சென்னை அசோக்நகரில் திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் கனிமொழி எம்.பி. பங்கேற்று தொண்டர்களுடன் பொங்கலிட்டார். பின்னர் விழாவில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திரு.வி.க.நகர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று, கட்சி நிர்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிமுக இளைஞரணி சார்பில் அதன் இணை செயலாளர் வி.சுனில் தலைமையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 15 நாட்களாக மகளிருக்கான கோலப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 918 மகளிர், அணி அணியாக பங்கேற்று கோலமிட்டு வந்தனர். நேற்று சென்னை தியாகராயநகர் சீனிவாசா சாலையில் பொங்கல் விழாவும், இறுதி கோலப்போட்டியும் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் கவுதமி, மருத்துவர் அணி இணைச் செயலாளர் பா.சரவணன் ஆகியோர் பரிசு வழங்கினர். அனைவரும் புதுப் பானையில் பொங்கலிட்டும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தியாகராயநகர் பகுதி இணை செயலாளர் கே.சூரியகலா செய்திருந்தார்.
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் சின்னப்போரூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கோலமிட்டும், பொங்கலிட்டும் மகிழ்ந்தனர். தொடர்ந்து சிலம்பம், கும்மி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற தொண்டர்கள் ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். அவ்வாறு மத்திய சென்னை மாவட்டம் சார்பில், வில்லிவாக்கம் தொகுதியில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அதில் 1,000 பேருக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட தலைவர் பூக்கடை குமார், பகுதி தலைவர் விஎஸ்டி விசு ஆகியோர் வழங்கினர். மேலும், தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், பிரியாணியும் பறிமாறப்பட்டது. இதேபோல், மத்திய சென்னை மாவட்டம், எழும்பூர் பகுதியில் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.