சென்னை: உயர்கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்தான் அடித்தளமிட்டவர் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி த.பிச்சாண்டி எழுதிய ‘எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்’ எனும் நூல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விசுவநாதன் நூலை வெளியிட ஆர்எம்கே கல்வி குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ராமந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், மனிதநேய கல்வி மைய நிறுவனர் சைதை துரைசாமி, நூலாசிரியர் த.பிச்சாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் விசுவநாதன் பேசியதாவது: தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்காகவும் எம்ஜிஆர் ஆற்றிய பங்கு இன்றியமையாதது. உயர்கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருக்க அவர்தான் அடித்தளமிட்டார். தற்போது 440 பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு எம்ஜிஆர்தான் காரணம். தனக்கு படிக்கின்ற வாய்ப்பில்லை என்றாலும் ஏழைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். உயர்கல்வியில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றிக் காட்டினார். இதன்பலனே ஆண்டுக்கு 2 லட்சம் பொறியாளர்களை உருவாக்கி வருகிறோம்.
எந்த திட்டங்கள் தொடங்கினாலும் அது ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டவர் எம்ஜிஆர். ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் உதாரணம். அரசியல் நாகரிகத்தை வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தவர். ஒருவரை பற்றி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வந்துள்ளது என்றால் இது உலக சாதனையாகும். இவ்வாறு அவர் பேசினார். விழாவின் நிறைவில் எம்ஜிஆர் அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.