ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரவணன். கடந்த 5 மாதங்களுக்கு முன் தேனி மாவட்டம் போடியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புகாரின் அடிப்படையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உள்துறை செயலருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘காவல்துறையில் கடந்த 16 ஆண்டுகளாக நல்ல முறையில் பணியாற்றி வருகிறேன். எனக்கு கீழ் பணியாற்றும் காவலர்களை எனக்கு தெரிவிக்காமலேயே மாற்று பணிகளுக்கு அனுப்புகின்றனர். இதற்கு காரணம் திருவாடானை டி.எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றும் எழுத்தர்தான். சட்ட ஒழுங்கு, பொது அமைதியை நிலைநாட்டும் பணிகளுக்கு இடையூரை ஏற்படுத்தும் வகையில் ஆய்வாளரின் வாகன ஓட்டுநரை கூட வேறு பணிகளுக்கு மாற்றுகின்றனர்.
எனவே என்னால் எனது பணியை திறம்பட செய்ய முடியவில்லை. எனது காவல் நிலையத்தில் 50 பேருக்கு தற்போது 42 பேர்தான் பணியாற்றுகின்றனர். இதில் 10 பேர் எனது அனுமதியின்றி அயல் பணியில் உள்ளனர். இந்நிலையில், 328 புலன் விசாரணை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் இறுதி அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்ட தனிப்பிரிவு அலுவலக உத்தரவின்படி திருவாடானை டி.எஸ்.பி அலுவலகத்தில் தன்னிச்சையாக எனது நிர்வாகத்தில் தலையிட்டு நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்துகின்றனர். எனவே ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் தொடர்ந்து ஆய்வாளராக பணியாற்றவும், சட்ட ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றவும் விருப்பமில்லை” என கூறியுள்ளார்.
சீருடை பணியின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு என சிறப்பு விதிகள் உள்ள நிலையில், தனது துறையில் உள்ள குறைகள் குறித்து பொது வெளியில் வெளியிட்டுள்ள ஆய்வாளர் சரவணன் இது குறித்து கூறுகையில், ”உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பொதுவான பிரச்னைகள் குறித்துத்தான் கூறியுள்ளேன். எல்லா காவல் நிலையங்களிலும் இந்த பிரச்னை உள்ளது. போதுமான காவலர்கள் இல்லாததால் வாரம் ஒருநாள் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய விடுமுறையினை கூட கொடுக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலுடன் பணியாற்ற வேண்டியுள்ளது. இதன் காரணமாகத்தான் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்கிறார்.
ஆய்வாளர் சரவணன் எழுதிய கடிதம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் பேசினோம். அவர், ”மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பிரச்னைகள் சமீப காலமாக இல்லை. இந்நிலையில் அங்கு 50 பேர் பணியாற்றுகின்றனர். மாவட்டத்திற்குள் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வி.ஐ.பி வருகை உள்ளிட்டவற்றிற்கு அனைத்து காவல் நிலையத்தில் இருந்தும் காவலர்களை பாதுகாப்பு பணிக்காக எடுப்பது வழக்கமான ஒன்றுதான். இது போன்றே ஸ்பெஷல் டீம், நீதிமன்ற பணிகளுக்கு செல்வோரும் அயல் பணியிலேயே செல்கின்றனர்.
இந்நிலையில், தனது காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை தனக்கு தெரியாமல் மாற்றுப்பணிக்கு அனுப்புவது தொடர்பாக எனக்கு எந்த புகாரையும் அவர் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே அவர் ஆய்வாளராக பணியாற்றிய இடங்களில் அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இங்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இங்கும் அவர் மீது பணி ஒழுங்கீனம் குறித்த புகார்கள் உள்ளது. எனவே, அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள இது போன்ற புகாரினை பொது வெளியில் பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது. எனவே சீருடை பணி விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டது குறித்து விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.