ஜம்மு காஷ்மீர்: சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஜம்மு,

ஜம்மு – காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் ‘இசட்’ வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே லே வரை செல்லும் ரூ.2,700 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6.5 கிமீ நீளமுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, மத்திய மந்திரி நிதின் கட்கரி மற்றும் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் சுரங்கப் பாதை கட்டுமானத்துக்கு அயராது பணியாற்றிய தொழிலாளர்களை சந்தித்து, பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் அவர்களை வெகுவாக பாராட்டினார். பிரதமரின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இருவழிப் பாதையாக தலா 10 மீ., அகலம் கொண்ட சிக் – சாக் வளைவுகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையில், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில், ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்கள் செல்ல முடியும். அவசர காலத்தில் உதவும் வகையில், இந்த சுரங்கப்பாதையின் அருகில் 10 மீ., அகலத்தில் மற்றொரு சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே சுரங்கப்பாதையாகவும் இதை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இமயமலை புவியியலைக் கருத்தில் கொண்டு, நியூ ஆஸ்ட்ரியன் சுரங்க முறையில், இந்த இசட் வடிவ சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளை தவிர்த்து சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் – லே இடையே அனைத்து காலங்களிலும் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும். ஸ்ரீநகர் – சோனாமார்க் இடையே அனைத்து வானிலைகளிலும் செல்லும் வகையில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.