“டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை" – BCCI புதிய செயலாளர் ஓப்பன் டாக்

இந்திய அணி கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்று மோசமான தோல்வியைச் சந்தித்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) புதிய செயலாளர் தேவஜித் சைகியா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சிறப்பாகச் செயல்படவில்லை என்றும், அதைப்பற்றி கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Rohit, Gambhir | ரோஹித், கம்பீர்

ஐ.சி.சி சேர்மேனாக ஜெய் ஷா பதவியேற்றதைத் தொடர்ந்து, BCCI-யின் செயலாளராக நேற்று பதவியேற்றபின் BCCI தலைமைச் செயலகத்தில் பேசிய தேவஜித் சைகியா, “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு தொடர்களில் நாம் சிறப்பாகச் செயல்படவில்லை. அடுத்து இங்கிலாந்துக்கெதிரான டி20 தொடரும், அதைத்தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இருக்கிறது. தற்போது, இது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இருப்பினும், ஒரே சமயத்தில் ஒரு தொடரைப் பற்றிதான் சிந்திக்கவேண்டும்.

கடந்த இரண்டு நாள்களாக நிறைய கலந்துரையாடல்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். நம்முடைய குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், அவற்றை நாம் சமாளிக்கவேண்டும். அனைத்து நிபுணர்களின் கருத்துகளையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். எனவே, இந்த விவாதங்கள், பயிற்சிகளிலிருந்து மிகவும் சாதகமான முடிவை எதிர்பார்க்கிறோம். ஐ.சி.சி தலைவரும், BCCI-யின் முன்னாள் செயலாளருமான ஜெய் ஷா செய்த பணிகளை நான் முன்னெடுத்துச் செல்வேன்.” என்று கூறினார்.

BCCI புதிய செயலாளர் தேவஜித் சைகியா

தேவஜித் சைகியாவைப் பொறுத்தவரையில், 1990-91ல் முதல்தர கிரிக்கெட்டில் நான்கு போட்டிகளில் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து வடக்கு எல்லை ரயில்வே மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) விளையாட்டுத்துறை இட ஒதுக்கீட்டின் மூலம் வேலை பெற்ற தேவஜித் சைகியா, சட்டப் பணிக்குத் திரும்பி 28 வயதில் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். தற்போது அஸ்ஸாமின் முதல்வராக இருக்கும் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா, 2016-ல் அஸ்ஸாம் கிரிக்கெட் அஸோஸியேஷனின் தலைவராக இருந்தபோது, அதன் ஆறு துணைத் தலைவர்களில் ஒருவராக தேவஜித் சைகியா இருந்தார். பின்னர், 2019-ல் அதன் செயலாளராக உயர்ந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.