சென்னை: ஜன.18-ம் தேதி அன்று ஒருநாள் மட்டும் 100 சார் பதிவாளர் அலுவலங்களுக்கு செயல்டுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறையும், ஜன.20 அன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்து வழங்கவும் பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பொங்கல் பண்டிகையினை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக ஜன.14-ம் தேதி முதல் ஜன.16 வரை தொடர் அரசு விடுமுறை. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை ஜன.17 (வெள்ளிகிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் ஜன.25ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்பட்டுள்ளது.
எனவே, மேலே குறிப்பிட்டுள்ளபடி ஜன.17-ம் தேதி வரை தொடர் விடுமுறை உள்ள நிலையில் அதன்பின் வரும் ஜன.18-ம் தேதி அன்று சனிக்கிழமையில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலங்களுக்கு ஜன.18-ம் தேதி அன்று ஒருநாள் மட்டும் செயல்படுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தை மாதத்தின் முதல் வேலை நாளான வரும் ஜன.20-ம் தேதி அன்று சுபமுகூர்த்த தினமாக உள்ளதால், அன்று அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதனை ஏற்று, ஜன.20-ம் தேதி அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரன முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.