திருவாரூர்: "நேஷனல் டீம்ல விளையாடணும்" – தேசிய அளவிலான நெட்பால் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சாதனை

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் முகமது இருஃபான். கடந்த டிசம்பர் 28 முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வலைப்பந்து (Netball) சங்கம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான வலைப்பந்து போட்டியில் சப் ஜூனியர் பிரிவு தமிழக அணியில் இடம் பெற்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே அரசு பள்ளி மாணவர் இவர்.

தமிழ்நாடு அணி

இதில் இருஃபான் விளையாடிய 7 பேர் கொண்ட தமிழக அணி இறுதிப் போட்டியில் கேரளாவை வீழ்த்தி முதலிடம் பெற்றது. இது தொடர்பாக அந்த மாணவனைக் காண அப்பள்ளிக்குச் சென்றோம். நூற்றாண்டைக் கடந்த அந்த பள்ளி மாலை இடைவேளையில் மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த வேளையில் தனது வெற்றி குறித்து பேசிய முகமது இருஃபான், “கடைசி மூணு வருஷமா நான் நெட் பால் ப்ராக்டிஸ் எடுத்துட்டு இருக்கேன். சென்னை கும்மிடிப்பூண்டியில நடந்த செலக்சன்’ல கடைசியா 12 பேர் வந்தாங்க. அந்த 12 பேர்ல இருந்து மெயின் 7 பேர்ல நானும் ஒருத்தனா செலக்ட் ஆனேன். தமிழ்நாடு டீம்’ல விளையாடுனது ரொம்ப பெருமையா இருக்கு.

அடுத்து நேஷனல் டீம்ல விளையாடறதுதான் என்னுடைய இலக்கு. இந்த கேம் மட்டுமல்லாம பேஸ்கட் பால், அடில்ஸ் போன்ற கேம்களையும் கவனம் செலுத்துறேன். எங்க ஸ்கூல்’ல முறையா கிரவுண்ட் கிடையாது. இருந்தாலும், PET சார் திருவாரூர் கிரவுண்டுக்கு அழச்சிட்டு போய் ப்ராக்டிஸ் கொடுப்பாங்க. நான் நல்லா விளையாட காரணமா இருந்த PET சார், ஹெட் மாஸ்டர், க்ளாஸ் டீச்சர், என்னோட பேரன்ட்ஸ் எல்லாருக்கும் நன்றி” என்று கூறினார்.

தமிழ்நாடு அணி

தொடர்ந்து நம்மிடம் பேசிய அப்பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் சத்திய சாய்நாதன், “எம் பள்ளியின் மாணவன் தேசிய அளவில் விளையாடி பள்ளிக்கும், திருவாரூர் மாவட்டத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளான். தமிழ்நாடு அணி வெற்றி பெறவும் எம் மாணவன் முக்கிய பங்கு வகுத்துள்ளான். இந்த மாணவனின் வெற்றி குறித்து சொல்ல வேண்டுமென்றால் அவனுக்கு முழு அக்கறையோடு விளையாட்டு பயிற்சி அளித்த இப்பள்ளியின் பகுதி நேர ஆசிரியர் விக்னேஷ் அவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

ஏனெனில் அவராகவே பள்ளி வார விடுமுறை, மாத விடுமுறை போன்ற நாள்களில் பள்ளியில் கேம்ப அமைத்து பயிற்சி அளித்து வந்தார். அந்த பயிற்சியே இந்த மாணவனுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. சென்ற ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் 42 அணிகள் பங்கேற்றதில் எம் பள்ளியும் அடங்கும். இந்த 42 அணிகளில் நாங்கள் மட்டும்தான் அரசுப் பள்ளி.

திருவாரூர் – மாணவன் முகமது இருஃபான்

இப்பள்ளிக்கு முறையான விளையாட்டு வசதியும் உபகரணங்களும் இல்லாமலே மாணவர்கள் விளையாடி வருகின்றனர். இப்பள்ளிக்கென ஐந்து ஏக்கரில் விளையாட்டு மைதானம் உள்ளது. ஆனால் அது பள்ளியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இருந்தும் அந்த மைதானம் சரியான வசதிகளுடன் இல்லை. எனவே, பள்ளிக்கு உள்ளேயே அமைந்துள்ள சிறிய இடத்தில்தான் மாணவர்கள் பயிற்சிபெற்று வருகின்றனர்.

திருவாரூர்: நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

இந்த விளையாட்டு மைதானம் தொடர்பாகப் பள்ளியின் சார்பிலும் முன்னாள் மாணவர்கள் சார்பிலும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். ஆனால், இதுவரையிலும் எந்த ஒரு முன்னெடுப்பும் இல்லை. நல்ல மைதானம் இருந்தால் முகமது இருஃபான் போன்று நல்ல விளையாட்டு வீரர்கள் உருவாவார்கள்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.