புதுடெல்லி: “பிரயாக்ராஜில் தொடங்குகிற மகா கும்பமேளா 2025 எண்ணற்ற மக்களை நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் புனிதமான சங்கமத்தில் ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் காலம் கடந்த ஆன்மிக பாரம்பரியத்தை உள்ளடக்கிய மகா கும்பமேளா, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா 2025 தொடங்கியதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், “பாரதத்தின் விழுமியங்களையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். பிரயாக்ராஜில் தொடங்குகிற மகா கும்பமேளா 2025 எண்ணற்ற மக்களை நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் புனிதமான சங்கமத்தில் ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் காலம் கடந்த ஆன்மிக பாரம்பரியத்தை உள்ளடக்கிய மகா கும்பமேளா, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது.” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முன்னதாக, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். 12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பவுர்ணமி என்பதால் கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராட அதிகளவில் திரண்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாதுக்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இந்த பங்கேற்கும் வகையில் அங்கு முகாமிட்டுள்ளனர். நாளை மகர சங்கராந்தி என்பதால் இந்த நிகழ்வின் முதல் அமிர்த கால நீராடல் நடைபெற உள்ளது. திரிவேணி சங்கமத்தில் நீராடுவது பாக்கியம் என்றும், பகவான் ராமர் கூட இங்கு வந்து நீராடி உள்ளதாக ஐதீகம் சொல்கிறது என பண்டிதர் பவன் குமார் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.