விவேகானந்தரின் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவோம் என தேசிய இளைஞர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘வளர்ந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல்’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துடிப்பான இளைஞர்கள் பங்கேற்றனர்.
அரசியலுடன் தொடர்பு இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய இளைஞர்கள் விவகாரத் துறை செய்திருந்தது.
இரண்டாம் நாளாக நேற்று நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நேற்று ஒரு நாள் முழுவதும் அவர் இளைஞர்களுடன் செலவிட்டார். அங்கு நடைபெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதுமையான திட்டங்களை பார்வையிட்ட அவர் இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அந்த திட்டங்கள் தொடர்பாக இளைஞர்கள் பிரதமரிடம் செயல் விளக்கம் செய்து காட்டினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, “இளைஞர்கள் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று இந்திய இளைஞர்களின் ஆற்றல் பாரத் மண்டபத்தில் நிறைந்துள்ளது. இந்த நாடே சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்கிறது. நாட்டில் உள்ள இளைஞர்கள் மீது விவேகானந்தர் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இளம் தலைமுறையினர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார்கள் என அவர் தெரிவித்தார். விவேகானந்தர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்ததைப் போலவே நானும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். அவர் செய்த அனைத்தையும் நான் நம்புகிறேன்.
பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், உலகின் எதிர்காலம் குறித்து சர்வதேச தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதே இடத்தில் இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பாதையை என் நாட்டின் இளைஞர்கள் வடிவமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். “சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கிறார். அவர் இளம் மனங்களில் ஆர்வத்தையும் நோக்கத்தையும் தொடர்ந்து பற்றவைக்கிறார். வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.