Champions Trophy: இந்திய அணியின் 2 பிரச்னைகள்… யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

Champions Trophy 2025, Team India: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அணிகள் தங்களின் ஸ்குவாடை அறிவிக்க ஜன. 12ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ நடந்து முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை காரணம் காட்டி இன்னும் ஒரு வார காலம் ஐசிசியிடம் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் 8 அணிகள் விளையாடும் நிலையில், தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் மட்டுமே இன்னும் தங்களது ஸ்குவாடை அறிவிக்கவில்லை. கடைசியாக ஆஸ்திரேலிய அணி தனது ஸ்குவாடை இன்று அறிவித்தது. இந்நிலையில், வரும் ஜன. 19ஆம் தேதி இந்திய அணியின் தேர்வுக்குழு ஒன்று கூடி, சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய ஸ்குவாடை அறிவிக்கும் என கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி | இந்திய அணியில் 2 கேள்விகள்

வரும் ஜன. 18ஆம் தேதியோடு, உள்ளூர் ஓடிஐ தொடரான விஜய் ஹசாரே தொடர் நிறைவு பெறுகிறது. இந்த தொடரின் நிறைவையொட்டி இந்திய அணி தனது 15 பேர் கொண்ட ஸ்குவாடை அறிவிக்கும் என கூறப்படுகிறது. அப்படியிருக்க விஜய் ஹசாரே தொடரை வைத்தும் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அந்த வகையில், சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை பொறுத்த வரை 2 ஸ்பாட்டில் எந்த வீரரை தேர்வு செய்வது என்பதே பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது. ஒன்று பேக்-அப் விக்கெட் கீப்பர், மற்றொன்று குல்தீப் யாதவ் இல்லாவிட்டால் மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் யார் என்பதுதான்.

குல்தீப் இல்லாவிட்டால் யார்…?

கடந்த 2023 உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் இந்திய அணியின் பிரீமியம் ஸ்பின்னராக இருந்தார். மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளரான இவர் தற்போது இந்திய அணியின் தவிர்க்க முடியாத சொத்து எனலாம். அப்படியிருக்க, அவர் காயத்தில் இருந்து முழுமையாக தகுதிபெற்றுவிட்டாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இன்னும் ஒருவாரத்தில் அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்.

ஒருவேளை குல்தீப் யாதவ் உடற்தகுதி பெறாவிட்டால் இந்த 2 டி20 ஸ்பின்னர்களை தான் இந்திய அணி ஒருநாள் அணிக்குள் கொண்டு வர வேண்டும். தற்போதைய பயிற்சியாளர் கம்பீர் எல்எஸ்ஜியில் இருந்தபோது அங்கு விளையாடிய ரவி பிஷ்னோயும், கம்பீர் கேகேஆர் அணியில் இருந்தபோது அங்கு விளையாடிய வருண் சக்கரவர்த்தியும்தான் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ஆப்ஷன்கள்.

இந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் வருண் சக்ரவர்த்தியின் எகனாமி 4.36 ஆகவும், பிஷ்னோயும் எகனாமி 3.64 ஆகவும் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி துபாயில் நடைபெறுவதால் அங்கு வருணை விட பிஷ்னோய் கைக்கொடுப்பார் என்றே பலரும் கருதுகின்றனர். மேலும், பீல்டிங்கிலும் பிஷ்னோய் தான் முன்னணி வகிக்கிறார். எனவே குல்தீப் இல்லாதபட்சத்தில் பிஷ்னோய் ஓடிஐ பக்கம் செல்லவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

2வது விக்கெட் கீப்பர் யார்?

ரிஷப் பண்ட்தான் இந்த முறை பிரதான விக்கெட் கீப்பர். கேஎல் ராகுல் இந்த முறை ஓடிஐயில் விளையாடினால் பிரதான பேட்டராக மட்டுமே விளையாடுவார். அப்படியிருக்க 2வது விக்கெட் கீப்பர் பேட்டர் இடத்திற்கு 3 பேர் தற்போது போட்டியிடுகின்றனர். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், துருவ் ஜூரேல் ஆகியோர்தான் அந்த 3 பேர். இதில் சஞ்சு சாம்சன் டி20இல் அடுத்தடுத்து சதம் அடித்தாலும் அவரை ஓடிஐ பக்கம் கொண்டுவருவது கடினம் என்றே தோன்றுகிறது. முக்கிய காரணம் அவர் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பங்கேற்காததை குறிப்பிடலாம்.

அதோபோல், இஷான் கிஷன் 27 ஓடிஐ போட்டிகளில் விளையாடி 42 சராசரியுடன் 1 இரட்டை சதம், 7 அரைசதங்கள் உடன் 933 ரன்களை குவித்துள்ளார். இந்த விஜய் ஹசாரே தொடரிலும் அவர் 7 இன்னிங்ஸில் 316 ரன்களை அடித்தார். அதிலும் வடகிழக்கு அணி ஒன்றுடன் சதம் அடித்திருந்தார். அப்படியிருக்க இவரும் தேர்வு குழுவினரை பெரியளவில் ஈர்க்க மாட்டார். இவர் இந்திய அணியின் ஒப்பந்தத்தில் இருந்து கடந்தாண்டு நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, 2ஆவது விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேல் நேரடியாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்டின் பேக்அப்பாக தோற்றமளிக்கும் துருவ் ஜூரேல், டி20 ஸ்குவாடில் தற்போது சேர்க்கப்பட்டிருப்பதால் இவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் அதிகம் பேட்டிங் செய்ய வைக்கப்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.