மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. இதில் 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு முதல் பரிசாக காரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன. இதேபோல், சிறந்த காளைக்கான முதல் பரிசை வி.கே.சசிகலாவின் காளை வென்றது. காளை வளர்ப்பாளர் மலையாண்டி பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி 11 சுற்றுகளாக நடைபெற்றன.
இறுதிச்சுற்றில் 30 பேர்: மஞ்சள், இளஞ்சிவப்பு, நீல நிறம் அணிந்த வீரர்கள் சுற்றுக்கு தலா 50 பேர் வீதம் களம் கண்டனர். 10 சுற்றுகள் முடிந்த பிறகு, அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்த 30 பேர் வீர்ரகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த இறுதிச் சுற்றின்போது மதுரை அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல், வீரர்கள் காளைகளை அடக்கியதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
37 காளைகள் தகுதி நீக்கம்: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில், பங்கேற்க 2,026 காளைகளும் 1,735 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். 925 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு, 888 காளைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, அவிழ்க்கப்பட்டன. போலி ஆவணம், காயங்களுடன் கொண்டு வரப்பட்ட 37 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இப்போட்டியில் 500 வீரர்கள் பங்கேற்றனர்.
19 காளைகளைப் பிடித்தவருக்கு முதல் பரிசு: வாடிவாசலில் இருந்து திமிறிக்கொண்டு வெளிவந்த காளைகளின் திமிலைப் பிடித்து வீரர்கள் அடக்கினர். விறுவிறுப்பாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் முதலிடத்தையும், 15 காளைகளை அடக்கிய குன்னத்தூரைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் இரண்டாமிடத்தையும், 14 காளைகளை அடக்கிய திருப்புவனத்தைச் சேர்ந்த முரளிதரன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
முதல் பரிசு பெற்ற மாடுபிடி வீரர் கார்த்திக்கு, ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள நிசான் காரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடம்பிடித்த முரளிதரனுக்கு பரிசு வழங்கப்படவில்லை.
சிறந்த காளைக்கான பரிசாக டிராக்டர்: இதேபோல், இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் வி.கே.சசிகலாவின் காளை சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்றது. காளை வளர்ப்பாளரான மலையாண்டி பரிசைப் பெற்றுக் கொண்டார். முதல் பரிசாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள டிராக்டரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டது. மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் சார்பில் பசுவும் கன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. ஜி.ஆர்.கார்த்திக் என்பவரது காளைக்கு இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் சங்கீதா ஆகியோர் வழங்கினர்.
45 பேர் காயம்: இந்தப் போட்டியில், பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள், காவலர்கள் உட்பட 45 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், போட்டியின்போது காளை ஒன்று மார்பில் முட்டியதில், படுகாயமடைந்து ரத்தக் காயங்களுடன் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நவீன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.