அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிய TTV தினகரன் காளை; நின்று விளையாடிய VK சசிகலா காளை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் கண்ட சசிகலா, தினகரன் காளைகள் வெற்றி பெற்றுள்ளன.

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு மரபார்ந்த வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை.

இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1,1000 மாடுகளும் 900 வீரர்களும் பங்கேற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

பல கம்பீரமான காளைகளுக்கு இடையில் பிரபலங்களின் காளைகளும் பங்கேற்றன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மாடு 8வது சுற்றில் களமிறங்கியது. மாடுபிடி வீரர்களை ஒருகணம் கூட நிதானிக்க விடாமல் ஆட்டம் காட்டி ஓட்டம் பிடித்து வென்றது.

சசிகலா மாடு

அடுத்ததாக வி.கே.சசிகலாவின் காளை களமிறங்கியது. ‘அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா என்ற சின்னம்மா மாடு’ என்ற வர்ணனையுடன் களமிறங்கியது காளை.

கொம்பில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு களத்தில் வந்து நின்ற காளை யாரையும் அருகில் அண்டவிடவில்லை.

ஒரு நிமிடத்துக்கும் மேலாக நின்று விளையாடிய காளை, காளையர்களை பார்வையிலும் உடல் சிலுப்பலிலும் மிரட்டியது. மாடு அவிழ்த்துவிட வந்த உரிமையாளர் தரப்பினரே போராடித்தான் அதை வாடிவாசலில் இருந்து அழைத்துச் சென்றனர்.

8வது சுற்று முடிவில் 636 காளைகள் களம் கண்டுள்ளன. இவற்றில் 149 மாடுகள் பிடிபட்டிருக்கின்றன.

நாளை மற்றும் மறுநாள் நடக்கும் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களின் காளைகள் பங்கேற்கும் எனக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.