டெல்லி பாரத மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
‘மிஷன் மௌசம்’ எனப்படும் வானிலை இயக்கம் என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் – இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ‘ஐஎம்டி விஷன்-2047’ ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். மேலும் நிகழ்ச்சியின் போது நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் பேசியதாவது: “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகள் ஆனது இத்துறையின் பயணத்தை மட்டுமல்ல என்றும் இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்துள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 150 ஆண்டுகால பயணத்தின் ஒரு பகுதியாக இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காக தேசிய வானிலை ஒலிம்பியாட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. வானிலை ஆராய்ச்சியில் மாணவர்களின் ஆர்வத்தை இது மேலும் அதிகரிக்கும்
இந்தியாவின் பாரம்பரியத்தில் மகர சங்கராந்தியின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற முறையில் எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை மகர சங்கராந்தி. மகர சங்கராந்தி சூரியன் மகர ராசிக்கு மாறுவதையும், உத்தராயணம் என்று அழைக்கப்படும் அதன் வடக்கு நோக்கிய மாற்றத்தையும் குறிக்கிறது. இந்த காலகட்டம் வடக்கு அரைக்கோளத்தில் சூரிய ஒளியின் படிப்படியான அதிகரிப்பைக் குறிக்கிறது. இது விவசாயத்திற்கான தயாரிப்புகளுக்கு வழிவகுக்கிறது.
மகர சங்கராந்தி இந்தியா முழுவதும் வடக்கு முதல் தெற்கு வரை, கிழக்கு முதல் மேற்கு வரை பல்வேறு கலாச்சார வெளிப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் அறிவியல் நிறுவனங்களின் முன்னேற்றம் அதன் அறிவியல் விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது. அறிவியல் நிறுவனங்களில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் புதிய இந்தியாவின் மனப்பான்மையுடன் ஒருங்கிணைந்தவை.
கடந்த பத்து ஆண்டுகளில், ஐஎம்டி-யின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் முன் எப்போதும் இல்லாத விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. டாப்ளர் வானிலை ரேடார்கள், தானியங்கி வானிலை நிலையங்கள், ஓடுபாதை வானிலை கண்காணிப்பு அமைப்புகள், மாவட்ட வாரியான மழை கண்காணிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அறிவியலின் முன்னேற்றம் புதிய உயரங்களை எட்டுவதில் மட்டுமல்ல. சாதாரண மனிதனின் வாழ்க்கையை எளிதாக்குவதிலும் உள்ளது. துல்லியமான வானிலை தகவல்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த அளவுகோலில் முன்னேறியுள்ளது. அனைவருக்கும் முன்கூட்டிய எச்சரிக்கை முன்முயற்சி தற்போது 90% மக்களைச் சென்றடைகிறது. கடந்த, வரவிருக்கும் 10 நாட்களுக்கான வானிலை தகவல்களை யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அணுகலாம். முன்னறிவிப்புகள் வாட்ஸ்அப்பில் கூட கிடைக்கின்றன.
முன்பெல்லாம் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது லட்சக்கணக்கான மீனவர்களின் குடும்பங்கள் கவலையடைந்தனர். ஆனால் இப்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஒத்துழைப்புடன் மீனவர்களுக்கு சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கை தகவல் விடுக்கப்படுகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில், எண்ணற்ற பெரிய புயல்கள், பேரிடர்கள் வந்தபோதிலும், உயிரிழப்புகளை இந்தியா வெற்றிகரமாக குறைத்துள்ளது அல்லது இல்லாமல் செய்துள்ளது. விஞ்ஞானம், தயார்நிலை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருளாதார இழப்புகளையும் குறைத்துள்ளது. பொருளாதாரத்தில் வலுவடைந்த தன்மையை உருவாக்கியுள்ளது.முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.