ஏழைகளுக்கு 600 குடியிருப்புகள்: புதுவையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் மார்ச்சில் நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் இதுவரை நடந்துள்ள பணிகள் தொடர்பாக அத்திட்டத்தின் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினர். தொடர்ந்து புதுச்சேரி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட தலைமை செயல் அலுவலர் ஜெயந்த் குமார் ரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கடந்த 2017-ம் ஆண்டில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.1,056 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர், பல்வேறு நிர்வாக மற்றும் நிதி காரணங்களால் திட்ட அளவு ரூ.612 கோடியாக குறைக்கப்பட்டது.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 82 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இதுவரை 57 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 25 பணிகள் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும். முக்கியமாக இதில் 3 பணிகள் மட்டும் மார்ச் மாதத்துக்கு பிறகும் நீடிக்க வாய்ப்புள்ளது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, குடியிருப்பு வசதிகள், பழங்கால கட்டிடங்கள் புதுப்பிப்பு, போக்குவரத்து சார்ந்தவை ஆகியவை அடங்கும். குறிப்பாக ரூ.30 கோடியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையம் விரைவில் முடிக்கப்படும்.

அண்ணா திடலில் மினி ஸ்டேடியம், பழைய துறைமுகத்தில் நகர்ப்புற பொழுதுபோக்கு மையம், பெரிய கால்வாய் மேம்பாடு, தாவரவியல் பூங்கா மேம்பாடு, மழைநீர் மற்றும் நகரப்பகுதியில் சாக்கடை கால்வாய்கள் ஆகியவை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். புதுச்சேரி அமைதியான மாநிலம்தான். சுத்தமான மாநிலமாக உருவாகுவது பிரச்சினையாக உள்ளது. தூய்மைப்பணியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளில் முக்கியத்துவம் தருகிறோம்” என்றார்.

அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நடக்கும் குமரகுருப்பள்ளம் அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய பேருந்து நிலைய பணிகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் விளக்கினர். தற்போது நடைபெற்று வரும் 25 திட்டங்களில், நான்கு திட்டங்களில், சமூகத்தின் ஏழைப் பிரிவினருக்கான பெரிய வீட்டுத் திட்டங்களாகும். குமரகுருப்பள்ளத்தில் ரூ. 45.5 கோடியில் 12 தளங்கள் கொண்ட இரண்டு குடியிருப்புகள் புதுச்சேரியில் மிக உயர கட்டிடங்களில் ஒன்றாக இருக்கும்.

சின்னயபுரத்தில் உள்ள குடியிருப்பு ஐந்து மாடிகளைக் கொண்டது, ஒவ்வொரு கட்டுமான செலவு ரூ.23. 45 கோடியாகும். அதேபோல் துப்ராயப்பேட்டையில் வீடுகள் கட்டுமானப்பணி நடக்கிறது. மொத்தம் சுமார் 600 வீடுகள் ஏழை மக்களுக்கு தரப்படவுள்ளது என்று தெரிவித்தனர்.அதேபோல் பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகள் நிறைவடையவுள்ளன. அதன் திறப்புத்தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.