காசா: காசா பகுதியில் போர்நிறுத்தம்; பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் பேச்சுவார்த்தை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எகிப்து அதிகாரி மற்றும் ஹமாஸ் அதிகாரி என இருவர் இந்தத் தகவலினை உறுதி செய்துள்ளனர். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறினார். என்றாலும் ஒப்பந்தத்தின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. பின்பு அவை ஒப்புதலுக்காக இஸ்ரேலிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
மத்திய கிழக்கு பகுதியில் 15 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவரவும், அதற்கு காரணமாக அமைந்த 2023, அக்.7-ம் தேதி தாக்குதலின் போது பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிக்கவும் அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வந்தன.
ஹமாஸால் பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் இன்னும் 100 பேர் காசாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரும் 20-ம் தேதி பதவி ஏற்பதற்கு முன்பாக ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ட்ரம்ப் தரப்பில் மத்திய கிழக்கு தூதர் இந்தப் பேச்சுவார்த்தையில் இணைந்திருந்தார்.
கத்தாரின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பேச்சுவார்த்தை நேர்மையாகவும் பயனுள்ளதாகவும் நடந்து வருகிறது என்றார். ஆனாலும் அதன் விவரங்களைத் கூற மறுத்துவிட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் வகுக்கப்பட்டு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று கட்ட ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் முன்மொழியப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை சந்தித்ததற்கு ஹமாஸ் இஸ்ரேலைக் குற்றம்சாட்டியது. ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் ஹமாஸ் மத்தியஸ்தர்களின் திட்டத்தை ஏற்றுக்கொண்டபோதும் இஸ்ரேல் அதை நிராகரித்தது என்றும் புதிய ராணுவ நவடிக்கையைத் தொடங்கியது என்றும் தெரிவித்தது. மறுபுறம், இஸ்ரேலும் அதன் நட்பு நாடான அமெரிக்காவும் பேச்சுவார்த்தை பின்னடைவுக்கு ஹமாஸைக் குற்றம்சாட்டின.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் 250 பேரை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46,000-க்கும் அதிமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள், பெண்கள் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.