காஞ்சிபுரம் நகரத்தில் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் நுழைகின்றன. இந்த பாம்புகள் நுழைந்தால் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். தீயணைப்புத் துறையினர் வந்து அந்த பாம்புகளை பிடிக்கின்றனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, “பாம்பு பிடிக்க எங்களுக்கு கம்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மற்றபடி பாம்புகளை பிடிப்பது தொடர்பாகவோ, எந்த வகை பாம்புகளை எப்படி பிடிப்பது என்பது குறித்தோ எந்த பயிற்சியும் தீயணைப்பு வீரர்களுக்கு கிடையாது. சில நேரங்களில் விஷபாம்புகளை விஷமல்லாத பாம்பு என்று அஜாக்கிரதையாக கையாண்டு சில ஊழியர்கள் பாம்பு கடிக்கு ஆளாகின்றனர்.
பாம்புகள் குறித்து முறையான பயிற்சி வனத்துறை ஊழியர்களுக்குதான் உள்ளது. பாம்பு பிடிக்கும் பணியை அவர்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்தால் அதை என்ன செய்வது என்பது குறித்தும் சரியான புரிதல் இல்லை. அந்த பாம்பை காட்டு பகுதிக்கு கொண்டு சென்று விட்டுவிட வேண்டும்.
அதற்கான வாகன பெட்ரோல் செலவு கணக்கு எழுதுவதில் பிரச்சினை எழுகிறது. தற்போதெல்லாம் தீயணைப்பு மற்றும் இதர பிரச்சினை தொடர்பாக வரும் அழைப்புகளை விட பாம்பு இருப்பதாக வரும் அழைப்புகளே ஏராளமாக உள்ளன. காஞ்சிபுரத்தில் பாம்பு இருந்தால் அதைப் பிடித்துச் சென்று செவிலிமேடு பகுதியில் விட்டுவிடுகின்றனர்.
அப்பகுதி மக்கள் அழைக்கும் போது, அதனை பிடித்துச் சென்று திருப்பருத்திகுன்றம் பகுதியில் விடுகிறோம். பின்னர் அந்த பாம்புகள் அங்குள்ள குடியிருப்புக்குள் நுழைகின்றன. அங்கு சென்று பிடிக்க வேண்டியுள்ளது. இப்படியே தொடர்கதையாக உள்ளது. பாம்பு பிடிப்பதில் வனத்துறையினரை ஈடுபடுத்த வேண்டும்.
இல்லையேல் நாங்கள் பிடிக்கும் பாம்புகளை குறைந்தபட்சம் வனத்துறை பெற்று அதனை காட்டில் விடும் நடவடிக்கையையாவது அவர்கள் செய்ய வேண்டும். காடு வனத்துறைக்கு சொந்தமானது. பாம்பு வாழ்வதற்கு உகந்த இடம் எது என்ற புரிதல் தீயணைப்புத் துறையினரிடம் இல்லை” என்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் வனச்சரகர் கோபுகுமாரிடம் கேட்டபோது, “குடியிருப்புக்குள் நுழையும் பாம்புகளை வனத்துறையும் பிடிக்கலாம், தீயணைப்புத்துறையும் பிடிக்கலாம். வனத்துறையிடம் போதிய ஆட்கள் இல்லை. இப்போது கூட குரங்குகள் அட்டகாசம் அதிகம் இருக்கிறது என்று குரங்கு பிடிக்க சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில் பாம்பு இருப்பதாக அழைப்பு வந்தால் உடனடியாக செல்ல முடியாது. எனவே, அந்த நேரத்தில் தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்துகாட்டுப் பகுதியில் விட வேண்டும். போதிய ஆட்கள் இல்லாமல் வனத்துறையினர் குடியிருப்புகளில் நுழையும் பாம்புகள் அனைத்தையும் பிடிக்க வேண்டும் என்றால் சாத்தியம் இல்லை. அந்த நேரத்தில் வேறு பணி இல்லை என்றால் வனத்துறை ஊழியர்கள் பாம்பு பிடிக்க முடியும்” என்றார்.