சென்னை: பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தில் கட்டியுள்ள ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் பணியாளர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் கருணை கொடை வழங்கும் திட்டத்தை, சென்னையில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். 16 பேருக்கு ரூ.1,000-க்கான காசோலைகளை வழங்கினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், பணியாளர்கள் 2,516 பேருக்கு பொங்கல் கருணை கொடையாக கடந்த ஆண்டு முதல் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் கோயில் பணியாளர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் கருணை கொடையாக ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. அதன் அருகே உள்ள 31 சென்ட் இடத்தில் 16 குடும்பத்தினர் கடந்த 1994-ம் ஆண்டு முதல் குடியிருக்கின்றனர். அந்த இடத்தின் முன்பகுதி சென்னை மாநகராட்சிக்கும், பின்பகுதி கோயிலுக்கும் சொந்தமானது. அதனால், 2 துறைகளும் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அதில், கோயில் இடம் 325 சதுரஅடி, மாநகராட்சி இடம் 328 சதுரஅடி என மொத்தம் 653 சதுரஅடி பரப்பில் ஒரு குடியிருப்பு அமைந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதான ஞானசேகரனின் தந்தை தாமோதரன் பெயரில் இந்த குடியிருப்பு உள்ளது.
இது உட்பட ஆக்கிரமிப்பில் உள்ள 16 குடியிருப்புகளையும் நியாய வாடகையின்படி வாடகைதாரர்களாக ஏற்பதா அல்லது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதா என துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சட்டத்துக்கு புறம்பாக கோயில் நிலங்களை யார் ஆக்கிரமித்தாலும், அவை அகற்றப்படும். இதுவரை சுமார் ரூ.7,126 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.