தருணம் விமர்சனம்: டென்ஷன், த்ரில் தரவேண்டிய ஒன்லைன்… ஆனால் திரைக்கதையில் தடுமாறுவது ஏனோ?

சி.ஆர்.பி.எப் சிறப்புக் காவல்துறை அதிகாரியான அர்ஜுன் (கிஷன் தாஸ்) பணிநேரத்தில் தவறுதலாகத் தனது நண்பரைச் சுட்டுவிட்டதால் இடைநீக்கத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு திருமண விழாவில் மீராவை (ஸ்மிருதி வெங்கட்) சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. மீராவின் நண்பராக இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ரோஹித்துக்கு (ராஜ் அய்யப்பன்) இது பிடிக்கவில்லை. மீராவின் மேல் இருக்கும் ஒருதலைக் காதலை அவரிடம் வெளிப்படுத்துகிறார். அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல ரோஹித்திடம் பழகுகிறார் மீரா. ஒருநாள் அர்ஜுன் மீராவின் வீட்டிற்குள் வர, சமையலறையில் மீராவின் அருகே பிணமாகக் கிடக்கிறார் ரோஹித். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதே `தருணம்’ படத்தின் கதை.

தருணம் விமர்சனம்

கம்பீரமான மேனரிசம், சிறப்பான ஸ்டன்ட் என்று CRPF அதிகாரிக்கான நடிப்பை கிஷன் தாஸ் கொடுத்திருந்தாலும், ரொமாண்டிக் கதாநாயகன் மோடிலிருக்கும் அவரது தோற்றம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. கொலையே பார்த்தாலும் சற்றே நிதானமாக இருக்கும் பாத்திரம் என்றாலும் எல்லா நேரமும் எந்த ஏற்ற இறக்கமும் இல்லாத பாவனைகளையே கொடுப்பதா?! (வசனத்தில் மட்டுமே நானும் போலீஸ் என்று பலமுறை சொல்வது… ஏனோ இடிக்கிறது!) கொலையைச் செய்துவிட்ட பதற்றத்தை ஒரு சில காட்சிகளில் சிறப்பாகக் கொடுத்தாலும், சில நிமிடங்களிலேயே பாத்திரத்தை விட்டு விலகிச் செல்வதும் மீண்டும் அதற்குள் வருவதுமாகக் கண்ணாம்பூச்சி ஆடுகிறார் நாயகி ஸ்மிருதி வெங்கட்.

நாயகனின் நண்பனாக வரும் பால சரவணன் சீரியஸான இடங்களில் போடும் நகைச்சுவை கதைக்கான பதற்றத்தையும் சேர்த்துக் குறைக்கிறது. அந்த இடத்தில் இப்படியான வசனங்களை வைத்திருக்கத் தேவையே இல்லை. வில்லனாக வரும் ராஜ் அய்யப்பன், கதாபாத்திரமாக வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளும் பணியைத் திறம்படச் செய்திருக்கிறார். ஆனால் அவரின் மிகை நடிப்பு உறுத்தலே! மகனைக் காணவில்லை என்கிற பதற்றம், சந்தேகம் ஆகியவை சேர உணர்வுபூர்வமான நடிப்பை அளவான மீட்டரில் கொடுத்திருக்கிறார் கீதா கைலாசம்.

தருணம் விமர்சனம்

இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையில் வரும் பாடல் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், பின்னணி இசையில் பரபரப்பை உயர்த்த கை கொடுத்திருக்கிறார். கேமரா பெரிதாக வீட்டிற்கு வெளியே செல்லவில்லை என்றாலும் குறுகிய இடத்தில் ஒரு திரில்லர் படத்துக்கான ஒளியுணர்வை சிறப்பான கோணங்களால் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி. அதற்கு ஏற்ப படத்தொகுப்பாளரும் தனது பணியைச் செல்வனே செய்திருக்கிறார். இருந்தாலும் பரபரப்பான இடங்களில் வரும் தேவையில்லாத நகைச்சுவை, முதல் பாதியில் ஏற்பட்டிருக்கும் தொய்வு ஆகிய இடங்களில் வெட்டி ஒட்ட வேண்டிய இடங்கள் நிறையவே இருக்கின்றன. டான் அசோக் மற்றும் சி.பிரபுவின் சண்டைக் காட்சிகள் அட்டகாசம். பார்க்கிங்கில் இரவு நேரத்தில் நடக்கும் அந்த ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்ட விதம் மாஸாக இருந்தாலும் நம்பகத்தன்மைக்கும் குறைவில்லாமல் இருப்பது ப்ளஸ்!

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசனின் திரைக்கதையில் விஷயங்கள் வேகமாக நகர்வது போல் தோன்றினாலும், அது ஆழமில்லாமல் மேலோட்டமாக இருப்பது அடுத்து என்ன என்கிற ஆர்வத்தைத் தூண்டவில்லை. தொடக்கமே துப்பாக்கிச் சூடு நடைபெறுவதில் தொடங்குகிறது. ஆனால் அது படமாக்கப்பட்ட விதத்தில் நம்பகத்தன்மை மிஸ்ஸிங். ராணுவ சீக்ரெட் ஆபரேஷன் ஏதோ வீடியோ கேம் போல விரிவது ஏமாற்றமே! ஆங்காங்கே நாயகி பாத்திரத்தில் தெளிவின்மை இருப்பது புலப்படுவதால் கதையோடு முழுமையாகப் பயணிக்க முடியாமல் போய்விடுகிறது. கதாபாத்திரத்துக்கு ஏற்படும் பிரச்னைகள்தான் கதையின் கரு என்றான பின்னரும், அவர்கள் அதிலிருந்து எப்படித் தப்பிக்கவேண்டும் என்கிற உணர்வை ரசிகர்களுக்குத் தரவேண்டிய எழுத்து மிஸ்ஸிங். இதற்கு முக்கிய காரணம் ஒரு சந்திப்புக்குப் பிறகு திருமண நிச்சயதார்த்தத்திற்குத் தயாராகும் நிலை, காரணமே இல்லாமல் போலீஸ் என்பதை மறைக்கும் கதாநாயகன் ஆகியவற்றைச் சொல்லலாம்.

தருணம் விமர்சனம்

இரண்டாம் பாதி த்ரில்லராக மாறி கதாநாயகன் தனது காவல்துறை மூளையால் திறமையாகத் திட்டமிட்டுப் பல சம்பவங்களை நடத்துவதாக நகர்கிறது. ஆனால் அதில் எதுவும் சாதுர்யமிக்கதாக புலப்படாமல் லாஜிக்கற்ற நகர்வுகளாகவே விரிகிறது. ஆங்காங்கே சில ஐடியாக்கள் சுவாரஸ்யம் என்றாலும், அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு இடங்களில்தான் சிசிடிவி இருக்கிறது என்பதும், தொப்பி அணிந்தால் கேமராவில் மாட்ட மாட்டோம் என்பதும் சுத்த போங்கு பாஸ்! கடைசியாக எட்டிப் பார்க்கும் அந்த ஒரு ட்விஸ்ட்டும் கதையோடு இயைந்ததாய் இல்லாமல் வேண்டுமென்ற இணைக்கப்பட்ட துண்டு சீட்டாகத் தனித்து நிற்கிறது.

மொத்தத்தில் ‘எங்கே மாட்டிக்கொள்ளப் போகிறார்கள்’ என்ற பதற்றத்தை உருவாக்க அத்தனை ‘தருணம்’ இருந்தும் அதைக் கோட்டை விட்டிருக்கிறது இந்தப் படைப்பு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.