ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடம்பெறாமல் ஜம்மு காஷ்மீர் முழுமை அடையாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் நடைபெற்ற 9-வது ஆயுதப்படை தினத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் இடம்பெறாமல் ஜம்மு காஷ்மீர் முழுமை அடையாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது அந்த நாட்டைப் பொறுத்தவரை ஒரு அந்நிய நாட்டின் நிலமே. பாகிஸ்தான் காஷ்மீரில் அந்நாடு பயங்கராவாத வேலைகளைச் செய்கிறது. அங்கு பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்துகிறது. அந்நாடு அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கடந்த 1965-ம் ஆண்டு அக்னூரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சிகளை முறியடிப்பதில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது இருந்து பாகிஸ்தான் சட்டவிரோத ஊடுருவலை ஊக்குவித்து வருகிறது.
கடந்த காலங்களில் காஷ்மீர் (முந்தைய அரசாங்கங்களால்) வித்தியாசமாக நடத்தப்பட்டது. அதன் காரணமாக இந்தப் பிராந்தியத்தில் உள்ள சகோதர, சகோதரிகளால் டெல்லியுடன் இணைய முடியவில்லை. நான் அந்த கடந்த காலங்களைப் பற்றி பேச விரும்பவில்லை.
ஜம்மு காஷ்மீருக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் உள்ள மக்களின் இதயங்களில் இடைவெளியைக் குறைத்து அவர்களுக்கான பாலமாக இருப்பது நமது அரசு (பாஜக) மிகப்பெரிய சாதனை நிகழ்த்தி வருகிறது.
சிறிய இடைவெளியைக் குறைப்பதற்கு (இடைவெளி இன்னமும் இருக்கிறது) சரியான நடவடிக்கைக்காக நான் முதல்வர் உமர் அப்துல்லாவை பாராட்டுகிறேன். நாங்கள் டெல்லியைப் போலவே அக்னூர் அல்லது காஷ்மீரை எங்களின் இதயங்களில் வைத்துள்ளோம்” இவ்வாறு பேசினார்.