பிரயாக்ராஜ்: மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை மகா கும்பமேளாவில் நடைபெற்ற முதலாவது அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “மகா கும்பமேளாவில் பக்தி, ஆன்மீகம் ஆகியவற்றின் அற்புதமான சங்கமம். மகர சங்கராந்தியை முன்னிட்டு மகாகும்பமேளாவில் முதல் அமிர்தக் குளியலில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவில் மகர சங்கராந்தி: குளிர்காலத்தின் முடிவையும் வெப்பமான நாட்களின் தொடக்கத்தையும் குறிக்கும் பண்டிகையான மகர சங்கராந்தியின் விடியல் நெருங்கியபோது, பிரயாக்ராஜில் முதல் அமிர்த ஸ்னானம் (புனித நீராடல்) தொடங்கியது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவற்றின் சங்கமத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடினர். முதல் அமிர்தக் குளியலின் போது 3.5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித சங்கத்தில் நீராடினர், முதல் இரண்டு நாட்களில் மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 5 கோடிக்கு மேல் அதிகரித்தது.
மகர சங்கராந்தி சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்படுவதால், பலர் சூரியனுக்கு அர்க்யத்தை வழங்கினர். புனித நீராடலுக்குப் பிறகு, பக்தர்கள் சடங்குகளைச் செய்து, படித்துறைகளில் பிரார்த்தனை செய்தனர்.
பிரம்ம முகூர்த்தத்திலிருந்து, சூரிய ஒளியின் முதல் கதிர்கள் தண்ணீரைத் தொட்டதில் இருந்து, இரவின் வருகை வரை, பக்தர்களின் இடைவிடாத நீராடல் நடந்தது. வேற்றுமைகளுக்கு இடையேயான ஒற்றுமை மகா கும்பமேளாவின் மிக ஆழமான அம்சங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.