விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பிசிசிஐ ஒப்பந்தம் நீக்கப்பட வாய்ப்பு! ஏன் தெரியுமா?

கேப்டன் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் ஆகியவற்றை இழந்துள்ளது இந்திய அணி. இந்திய அணியின் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாதது தோல்விக்கு காரணம் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார். மேலும் சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஞ்சிக் கோப்பை 2025

இந்த ஆண்டிற்கான ரஞ்சிக்கோப்பை சீசன் வரும் ஜனவரி 23ஆம் தேதி தொடங்குகிறது. சர்வதேச போட்டியில் விளையாடி வரும் வீரர்கள் அந்தந்த மாநில அணிக்காக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ரஞ்சித் தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலி டெல்லி அணிக்காகவும், ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும் விளையாடி உள்ளனர். ஆனால் இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு உள்நாட்டு தொடரிலும் விளையாடியது இல்லை. விராட் கோலி கடைசியாக 2012 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச அணிக்கு எதிராக விளையாடினார். ரோகித் சர்மா கடைசியாக 2015 ஆம் ஆண்டு உள்நாட்டு தொடரில் விளையாடினார்.

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன்

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபிக் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடாததால் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மத்திய ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்தது. இதே போல உள்நாட்டு தொடரில் பங்கேற்காத விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் மத்திய ஒப்பந்தத்தை பிசிசிஐ நீக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இளம் வீரர்களுக்கு ஒரு நியாயம் சீனியர் வீரர்களுக்கு ஒரு நியாயமா என்று சமூக வலைத்தளங்களில் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் உள்நாட்டு தொடரில் விளையாடவில்லை என்றாலும் அவர்கள் இருவர் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஏ ப்ளஸ் கேட்டகிரியில் உள்ளனர். ரோகித் சர்மா இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் கேப்டனாக உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளார். அவர்கள் தங்கள் கிரிக்கெட் கேரியரில் கடைசி காலகட்டத்தில் இருப்பதால் உள்நாட்டு தொடரில் விளையாடவில்லை என்றாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கூறப்படுகிறது. அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருவரும் விளையாட உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.