வீரர்களின் மனைவிகளுக்கு செக் வைத்த பிசிசிஐ… கடுமையான கட்டுப்பாடுகள்!

India National Cricket Team, BCCI: 2024-25 டெஸ்ட் சீசன் இந்திய அணிக்கு நினைத்தபடி சரியாக அமையவில்லை எனலாம். வங்கதேசத்திடம் மட்டும் ஆறுதலாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி (Team India), நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணிலேயே டெஸ்டில் வைட்வாஷ் ஆனது, கடந்த 6-7 வருடங்களாக  தக்கவைத்து வந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை (Border Gavaskar Trophy) ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது என தோல்விக்கு மேல் தோல்வியே இந்திய அணிக்கு கிடைத்தது. இதனால், இந்திய அணியே அடுத்த சீசனுக்குள் தலைகீழாக மாறும் என பலரும் கூறி வந்தனர்.

தலைகீழாக மாற்றங்கள் வராமல்விட்டாலும் சிறு சிறு கட்டுப்பாடுகள் இந்திய அணிக்குள் தற்போது வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, வீரர்களின் குடும்பங்கள் அதிலும் குறிப்பாக மனைவிமார்கள் இந்திய அணியின் சுற்றுப்பயணத்தின் போது வீரர்களுடன் பயணிப்பதில் சில கட்டுப்பாடுகள் விதிக்க பிசிசிஐ (BCCI) முடிவெடுத்துள்ளது. குடும்பத்தினர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்களுடன் நீண்ட நாள்கள் செலவிடுவது, ஆட்டத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என பிசிசிஐ நினைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீரர்களின் மனைவிகளுக்கு கட்டுப்பாடு

அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கு முன் வீரர்கள் தங்களின் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது குறித்து இந்த விதிகள் மீண்டும் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மொத்தம் 45 நாள்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது இனி வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக மனைவிமார்கள், வீரர்களுடன் வெறும் 2 வாரங்கள் மட்டுமே தங்குவதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுமட்டுமின்றி, அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அணி பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தனியாக வரும் வீரர்கள் வர அனுமதி இல்லை எனவும் பிசிசிஐ கட்டுப்பாடு விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விதிகள் 2019ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அமலில் இருந்ததாகவும், அதன் பின்னர் இதில் தளர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அனுஷ்கா சர்மாவுக்கு பிரச்னை?

இந்திய அணியின் வெளிநாட்டு பயணங்களின் போது முன்னணி வீரர்களின் மனைவிமார்கள், குடும்பத்தினரும் உடன் இருப்பதை பார்த்திருப்போம். விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா அடிக்கடி மைதானங்களில் தென்படுவார். அதேபோல், ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே மற்றும் கேஎல் ராகுலின் மனைவி அதியா ஷெட்டி ஆகியோரும் இனி சுற்றுப்பயணத்தின்போது முழுமையாக தங்களின் கணவருடன் இருக்க முடியாது.

கம்பீருக்கும் கட்டுப்பாடு

அணி வீரர்களுக்கு மட்டுமின்றி பிசிசிஐ, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், அவரது மேனேஜர் கௌரவ் அரோரா ஆகியோருக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கம்பீரின் மேனேஜர் இந்திய அணியினர் தங்கியிருக்கும் ஹோட்டலில் தங்கக் கூடாது என்றும், மைதானத்தில் விஐபி பாக்ஸில் அமர அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேபோல், கம்பீர் உடன் அவரது மேனேஜர் கௌரவ் அரோரா அணியினரின் பேருந்திலோ அல்லது அதற்கு பின் வரும் பேருந்திலோ வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.