இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த `வானத்தைப்போல’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. திரைப்படத்தின் நாஸ்டால்ஜியா தருணங்களை ரீகலெக்ட் செய்ய இயக்குநர் விக்ரமனை சந்தித்துப் பேசினோம்.
வானத்தைப்போல திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரைம் டைமில் டெலிகாஸ்ட் செய்யும் போது , யூட்யூபில் அதனுடைய வியூஸ் பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள்?
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைவிட ஒரு பெருமையான விஷயம் என்னவென்றால், இந்த மில்லினியம் ஆண்டில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் `வானத்தைப்போல’ திரைப்படம் தான். அதற்காகவே பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான திரைப்படங்களுக்கு முன்பே இந்தப் படத்தை நான் வெளியிட்டேன். சரியாக, டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் சாலக்குடியில் `மைனாவே மைனாவே’ பாடல் ஷூட்டிங் செய்துவிட்டு, அன்று மாலை விமானத்தில் நான், விஜயகாந்த் சார், வினிதா எல்லோரும் இங்கே வீட்டுக்கு வந்ததும் உடனடியாக எடிட்டிங் ரூமுக்கு நான் சென்றுவிட்டேன். இரவு முழுவதும் எடிட்டிங் பணி நடைபெற்றது. 2000 ஆம் ஆண்டின் புத்தாண்டை எடிட்டிங் ரூமில் தான் நான் கொண்டாடினேன். ஒன்பதாம் தேதி திரைப்படத்தின் காப்பி தயார் செய்து விட்டோம். நான் நினைத்த மாதிரி மில்லினியம் ஆண்டில் முதல் தமிழ்த் திரைப்படமாக ரிலீஸ் செய்ததில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் `வானத்தைப்போல’ தான். தமிழில் மட்டுமல்ல தென் இந்தியாவிலே முதல் படம் இதுதான்.
முதலில் இந்த கதைக்கு `அண்ணன் தம்பி’ என்ற டைட்டில் வைத்திருந்தீர்கள் என்று சொன்னீர்கள்… படமாக மாறும்போது `வானத்தைப்போல’ என்ற டைட்டில் முதலிலேயே பிக்ஸ் செய்து விட்டீர்களா?
விஜயகாந்த் சார் நடிக்கிறார் என்றதுமே அவருக்காக ஒரு டைட்டில் வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் `வானத்தைப்போல’ என்ற டைட்டில் வைத்தேன். அது படத்திற்குப் பொருத்தமாக வந்தது. `சின்னக் கவுண்டர்’ திரைப்படத்தில் `வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே’ என்பதில் ஈர்க்கப்பட்டுதான் இந்த டைட்டில் வைத்தேன். கேப்டனுக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் அதைச் செய்தேன்.
வானத்தைப்போல என்பது உங்களுக்கு இரண்டாவது டபுள் ஆக்ஷன் திரைப்படம். ஏற்கெனவே சூர்ய வம்சத்தில் டபுள் ஆக்சன் நடிக்க வைத்திருப்பீர்கள். இந்தத் திரைப்படத்தில் டபுள் ஆக்சனுக்கு எந்த மாதிரியான முயற்சிகள் எடுத்தீர்கள்?
கிராபிக்ஸ் அப்போதே வந்துவிட்டது. எல்லாருமே அப்போது கிராபிக்ஸ் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதன் மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தது. எனவே நான் கிராபிக்ஸில் எடுக்காமல், மிக்சர் கேமரா வைத்துவிட்டு மாஸ்கில் எடுத்தேன். அதில் என். கே விஸ்வநாதன் சார் ரொம்பவே கிரேட். அவர் ராமநாராயணன் சார் படத்துக்கு எல்லாம் நிறைய செய்திருக்கிறார். அவர் தலைசிறந்த கேமராமேன். `எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை’ பாடலில் நிறைய வெளிப்புற மாஸ்க்குகள் இருக்கும். அதில் லைட்டிங் மாறிக் கொண்டே இருக்கும். அதற்கெல்லாம் அவர் பயப்படவே மாட்டார். ஒரு வெற்றிலை பாக்கை போட்டுக்கொண்டு, `அதெல்லாம் பயப்படாதீங்க விக்ரமன் நல்லா தான் வரும்’ என அருமையாக எடுத்துக் கொடுத்தார்.
பிரபுதேவா கதாபாத்திரத்தைக் காட்டும்போது அண்ணன் சம்பாதித்து பணம் அனுப்புகிறார், ஆனால் தம்பி காலேஜ்ல லவ்வரோட பைக்கில் சுற்றுவது, தம் அடிப்பது, சீட்டு விளையாடுவது போன்ற காட்சிகளை வைத்து விட்டு அடுத்த சீனிலேயே பாராட்டு விழா இந்த ஐடியா எப்படி வந்தது?
நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்… வானத்தைப்போல அண்ணன் தம்பி கதையில் நான் முதன் முதலில் யோசித்த சீனே இதுதான். அதுவரைக்கும் தமிழ் சினிமாவில் அந்த சீன் 40, 50 திரைப்படத்தில் வந்து இருக்கிறது. அண்ணன் கஷ்டப்பட்டு தம்பியை பட்டணத்தில் படிக்க வைப்பார், ஆனால் அவர்கள் காலேஜில் வசதியாக சுற்றிக் கொண்டிருப்பார்கள். ரஜினி சாரின் `தர்மதுரை’ படத்தில் கூட அப்படி இருக்கும். அண்ணன் தேடி வந்தால் அண்ணன் யார் என்று தெரியாத மாதிரி காட்டிக் கொள்வார்கள். அண்ணன் சென்ற பிறகு வீட்டு வேலைக்காரன் என்று சொல்வார்கள். இப்படி பல படத்தில் வந்திருக்கிறது. இதனை மாற்ற வேண்டும் என்று தான் நான் முதலில் யோசித்தேன். `சூர்யவம்சம்’ திரைப்படத்தின் டிஸ்கஷனுக்காக குற்றாலம் சென்றேன். காலையில் எழுந்தும் எனக்கு தோன்றிய முதல் சீன் இதுதான். பாசிட்டிவா ஒரு அண்ணன் தம்பி எப்படி இருந்தா நல்லா இருக்கும் என்று யோசித்து செய்ததுதான் இது. சென்னையில் இந்துஸ்தான் என்ற இன்ஜினீயரிங் காலேஜில்தான் ஷூட்டிங் எடுத்தோம். படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே பார்த்திருந்த எல்லோருக்குமே ரொம்ப பிடித்து போயிருந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு விஜயகாந்த் ரோல் `அண்டர் பிளே’ கேரக்டராக தான் இருக்கும். அவருடைய ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்று நீங்கள் யோசித்தீர்களா?
நான் அந்த ஒரு மணி நேரத்தில் தவறு செய்து விட்டேன். தப்பு பண்ணிட்டேன். அந்த ஒரு மணி நேரத்தை இன்னும் வேறு மாதிரி கொண்டு சென்றிருக்கலாம். மாசாக ஒரு ஆக்ஷன் வைக்க வேண்டும் என்று கூட இல்லை. இன்னும் கொஞ்சம் ஹீரோயிசம் இருக்கிற மாதிரி செய்திருக்கலாம்.
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை சாங் பற்றி?
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை நா.முத்துக்குமார், பா விஜய், ரவிசங்கர் மூன்று பேர் சேர்ந்து எழுதியது. இந்தப் பாட்டினுடைய டியூனை மூன்று பேருக்கும் நான் கொடுத்துவிட்டேன். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பதை நா.முத்துக்குமார் எழுதினார். அதன்பிறகு சில வரிகள் பா விஜய் எழுதினார். கொஞ்சம் வரிகள் என்னுடைய அசிஸ்டன்ட் ரவிசங்கர் எழுதினார். `சிலுவைகளை நீ சுமந்து’ என்கிற வரிகள் எல்லாம் ரவிசங்கர் எழுதினார். நல்ல வரிகளை எடுத்துக்கொண்டு தயாரிப்பாளரிடம் தகவலைச் சொல்லி மூன்று பேருக்கும் கிரெடிட்ஸ் கொடுத்து விட்டேன். அதிகமாக பா. விஜய் ஐம்பதிலிருந்து அறுபது சதவிகிதம் எழுதி இருப்பார். ரவிசங்கர் 25 சதிவிகிதம் எழுதியிருப்பார். ஓப்பனிங் இரண்டு லைன் நா.முத்துக்குமார் எழுதியது.கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் ஃபேவரைட் பாடல் அதுதான். அது என்ன படம் என்ன சாங் என்று அவருக்கே தெரியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு தீம் பாடலாக எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை மாறியிருக்கிறது.