Ajith Interview: “அஜித் வாழ்க! விஜய் வாழ்க நீங்க எப்போ வாழப்போறிங்க?'' – துபாயில் அஜித் பேட்டி

அஜித்தின் ரேஸிங் குறித்தான பேச்சுதான் எங்கும் நிரம்பியிருக்கிறது.

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ரேஸில் `அஜித்குமார் ரேஸிங் டீம்’ 992 பிரிவில் முன்றாவது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்திருக்கிறது. பலரும் அஜித்தின் இந்த வெற்றி முகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் தற்போது துபாயில் பேட்டியளித்திருக்கிறார். துபாயிலுள்ள `Gulf News’ ஊடகத்திற்குப் அளித்த பேட்டியில் வெற்றி , தோல்வி குறித்தும் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கும் நச்சுதன்மை குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் அஜித்.

பயணமும் விளையாட்டும் மிக முக்கியமானது!

அந்தப் பேட்டியில் அவர், “எனக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிடிக்கும். அதிகமாக பயணம் செய்வதை நான் எப்போதும் விரும்புவேன். இந்த விஷயங்களெல்லாம் என்னை ஊக்குவிக்கும். என்னுடைய வேலையை புத்துணர்ச்சியுடன் தொடர்வதற்கு இவையெல்லாம் ரீசார்ஜ் செய்யும். நான் என்னுடைய குழந்தைகளிடம் கல்வியை கற்கச் சொல்வேன். தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ளக் கூறுவேன். பயணம் செய்வது வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் மற்றும் விளையாட்டுகளிலும் நாம் ஈடுபட வேண்டும். பயணம் செய்யும்போது வெவ்வேறு வகையான மனிதர்களை சந்திக்க முடியும். `முன் சந்திக்காத மனிதர்களையும் மதங்கள் வெறுக்கச் செய்யும்’ என்ற பிரபலமான கூற்று ஒன்று இருக்கிறது.

Ajith at Dubai 24H Series

இது உண்மையானதும்கூட. இது கிணத்துக்குள் இருக்கும் தவளையைப் போன்றது. பயணம் செய்யும்போது நீங்கள் எவ்வளவு சிறியவர்கள், இந்த உலகம் எவ்வளவு சிறியது என்பது உங்களுக்குப் புலப்படும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது வெற்றியையும் தோல்வியையும் கருணையுடன் கையாள்வதற்கு கற்றுக் கொள்வீர்கள். இதனால்தான் பயணமும் விளையாட்டும் மிக முக்கியமானது. வெற்றியைவிட தோல்வியே உங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். தோல்வி ஒவ்வொரு முடிவையும் எவ்வளவு கவனமாக எடுக்க வேண்டும் என்பதை சொல்லி தரும். நடிக்கும்போது சொதப்பினால் ரீடேக் எடுத்துக் கொள்ளலாம். டென்னிஸ் விளையாடும்போது சர்வீஸில் சொதப்பினால் மீண்டும் முயற்சி செய்யலாம்.

ஷாலினி மற்றும்  குழந்தைகளின் உறுதுணையில்லாமல் என்னால்…

ஆனால், ரேஸிங் பொறுத்தவரையில் இந்த ரீ டேக் கிடையாது. எந்த துறையாக இருந்தாலும் உங்களை சுற்றி நல்ல மனிதர்கள் இருக்க வேண்டும். என்றவர், “நீங்கள் எதை தேர்ந்தெடுத்து செய்கிறீர்களோ அதை திறம்பட செய்யுங்கள் என்று நான் கூறுவேன். வெற்றிக்கு எப்போதும் உங்களின் குடும்பத்தின் உறுதுணை மிகவும் முக்கியமானது. என்னுடைய மனைவி ஷாலினி மற்றும் என்னுடைய குழந்தைகளின் உறுதுணையில்லாமல் என்னால் இந்த விஷயத்தை சாத்தியப்படுத்தியிருக்க முடியாது. நீங்கள் ஒரு விஷயத்தை அடைய நினைக்கும்போது உங்களின் ஆர்வத்தை உங்களின் குடும்பத்தாரிடம் தெரியப்படுத்துங்கள். அவர்களிடமிருந்து உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். சாலை விபத்துகளில் நிறைய இளைஞர்கள் உயிரிழப்பதையும் காயமடைவதையும் நான் பார்க்கிறேன்.

Ajith at Dubai 24H Series

இப்படியான விஷயங்கள் மற்றவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. ஆனால், ரேஸிங் டிராக் பொறுத்தவரையில் இங்கு மெடிக்கல் சப்போர்ட் இருக்கும். உங்களுடைய வாகனங்கள் பாதுகாப்பனதாக இருக்கும். சாலை விபத்தில் சிக்கிய என்னுடைய நண்பர் ஒருவருக்கும் ஸ்பைனல் கார்ட் காயமடைந்திருக்கிறது. ஆதலால் பல விஷயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். மோட்டார் ஸ்போர்ட்ஸ் எப்போதும் பாதுகாப்பாக இருக்காது. சிறந்த வாகன ஓட்டிகளும் ரேஸிங் டிராக்கில் விபத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். ரேஸர் மைக்கேல் ஸ்கூமேச்சர் அப்படி விபத்தில் சிக்கியிருக்கிறார்.

இப்படியான விஷயங்கள் நடக்கதான் செய்யும். நாம் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு விளைவு இருக்கும். அந்த விளைவை சந்திப்பதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ரேஸிங்கில் என்னென்ன விளைவுகள் இருக்குமென்பது எனக்கு தெரியும். நல்ல நாட்ளும் இருக்கும் அதே சமயம் கெட்ட நாட்களும் இருக்கும். விளைகளை சமாளிக்க அதற்கேற்ப நம்மை தயார்ப்படுத்திக் கொண்டு சரியான உபகரணங்களை தேர்வு செய்ய வேண்டும்.

Ajith at Dubai 24H Series

நான் இப்போது ஒரு ரேஸிங் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். பலரும் ஃபேன்ஸி மோட்டார் சைக்கிளுக்கு செலவிடுவதை நான் பார்க்கிறேன். ஆனால், அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களான ஹெல்மட் போன்றவற்றில் கவனம் செலுத்த தவறிவிடுகிறார்கள். என்னுடன் பயணம் செய்யும் என்னுடைய நண்பர்களுக்கு நான் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து எடுத்துச் சொல்வேன்.” என்றார்.

மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது!

மேலும் பேசிய அஜித், “இன்றைய தேதியில் சமூக வலைதளப் பக்கங்களில் நச்சுத்தன்மை நிரம்பியிருக்கிறது. இன்று உலகமெங்கும் உள்ள மக்களுக்கு மென்டல் ஹெல்த் ஒரு முக்கியமான பிரச்னையாகவும் இருக்கிறது. அவர்களுடைய மென்டல் ஹெல்த்தை அவர்கள் இழக்கிறார்கள். சிக்ஸ் பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பலரும் அதை இழக்கிறார்கள். வாழ்க்கை மிகவும் சிறியது என்று என்னுடைய ரசிகர்களுக்கு நான் கூறுவேன். `எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற கூற்று இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவே உங்களுடைய வாழ்க்கை என்பதுதான் இதற்கு அர்த்தம்.

Ajith at Dubai 24H Series

உங்களுக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை அடைய உங்களின் திறனை அதற்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள். என்னுடைய ரசிகர்களே….படத்தை பாருங்கள். `அஜித் வாழ்க, விஜய் வாழ்க’ எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள். நான் உங்களுடைய அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய வாழ்க்கையை கவனியுங்கள். என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைவேன்.” எனப் பேசியிருக்கிறார்.

Vikatan play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.