புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல் நடைபெறும் ’கோ கோ உலகக்கோப்பை 2025’ போட்டியில், இந்திய மகளிருக்கான கோ-கோ அணியின் கேப்டனாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா இங்லே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவில் 23 முறை வெற்றிப்பெற்றுள்ள இவர், 2023-ம் ஆண்டில் நடந்த 4-வது ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்க மெடல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர்களின் எண்ணிக்கையை ஒன்பதிலிருந்து ஏழாகக் குறைப்பது மற்றும் மைதானத்தின் அளவைக் குறைப்பது என உலகக்கோப்பை போட்டியில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கடும்பயிற்சி செய்துள்ள இங்லேவின் தலைமையிலான இந்திய மகளிர் கோ-கோ அணி உலக அரங்கில் முத்திரை பதிக்க தயாராகவுள்ளனர்.
போட்டிக்கான அணியின் தயாரிப்பு குறித்து பேசியுள்ள இங்லே, “கோ-கோவுக்கான முதல் உலகக்கோப்பை இதுதான். நான் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாய் நியமிக்கப்பட்டுள்ளேன். அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமகிழ்ச்சி” என்றவர், “நாங்கள் ஒரு மாதமாக இரவும் பகலும் பயிற்சி செய்து உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகி வந்திருக்கிறோம். காலையில் உடற்பயிற்சி, மாலையில் மைதானத்தில் கோ கோ பயிற்சி என சவாலுக்கு தயாராக உள்ளோம்” என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆதரவோடு நடைபெறும் இந்நிகழ்வில் உலகம் முழுவதுமிருந்து 20 ஆண்கள் அணியும் 19 பெண்கள் அணியும் பங்கேற்கின்றன. ஆண்கள் அணியில் இந்தியாவோடு நேபாளம், பெரு, பிரேசில் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் ‘A’ பிரிவில் உள்ளன. பெண்கள் அணியில் இந்தியாவோடு ஈரான், மலேசியா மற்றும் கொரியா குடியரசு ஆகியவை ‘A’ பிரிவில் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…