சீயோல்: தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சாக் யோல் மீதான கைது நடவடிக்கைக்கு கடந்த டிசம்பர் 31ம் தேதியே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மிக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்றுதான் அவர் கைது செய்யப்பட்டார். தான் கைது செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை யூன் சாக் யோல் மேற்கொண்டிருந்த நிலையில், அனைத்து ஏற்பாடுகளையும் தாண்டி இன்று (ஜன.15) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை கைது செய்தது காவல் துறையினருக்கு அத்தனை எளிதானதாக இருக்கவில்லை.
கடந்த டிசம்பர் 3-ம் தேதி தென் கொரியாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார் அதிபர் யூன் சாக் யோல். இந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சட்டத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. டிசம்பர் 4-ம் தேதி நாடாளுமன்றத்தில் 6 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 190 உறுப்பினர்கள், யூன் சாக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதன் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 7 அன்று நடைபெற்றது. தீர்மானம் வெற்றி பெற 200 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பிபிபி கட்சியின் புறக்கணிப்பு காரணமாக 195 பேரின் ஆதரவு மட்டுமே கிடைத்தது. இதனால், 5 வாக்குகள் குறைந்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதையடுத்து, இரண்டாவது முறையாக பதவி நீக்க தீமானம் டிசம்பர் 14-ம் தேதி கொண்டுவரப்பட்டது. அப்போது, பிபிபி கட்சியின் 12 உறுப்பினர்கள் உள்பட 204 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததை அடுத்து, யூன் சாக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். யூனின் அதிகாரங்கள் தற்காலிகமாக பிரதமர் ஹான் டக்-சூ வசம் சென்றன. இதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 31-ம் தேதி யூன் சாக் யோலுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதேவேளையில், தனது அதிகாரபூர்வ மாளிகையில் இருந்தவாறு, தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் யூன் சாக் யோல். அதிபர் மாளிகையைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தொடர்ந்து கூடியதாலும், அதிபரின் பாதுகாப்புப் படை ஒத்துழைக்க மறுத்ததாலும் யூன் சாக் யோலை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதிபர் மாளிகை வளாகம் தொடர்ந்து பதற்றத்துடனேயே இருந்ததால் இரண்டு வாரங்களாக கைது செய்ய முடியாத நிலை நீடித்தது.
இந்நிலையில், இன்று விடியற்காலையில் 3,000-க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட யூன் சாக் யோலை கைது செய்வதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஏணிகளைப் பயன்படுத்தி பேருந்துகள் மீது ஏறியும், பல்வேறு தடுப்புகளை உடைத்தும், முள்வேலிகளைக் கட்டர்களைப் பயன்படுத்தி அகற்றியும் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
அதிபர் மாளிகையில் இருந்த சுமார் 150 பாதுகாப்பு அதிகாரிகள், ஆறு மணி நேரம் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டுள்ளனர். யூன் சாக் யோலின் ஆதரவாளர்களும் பெருமளவில் குவிந்து மனித சங்கிலியாக நின்று தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு இறுதியாக அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர். யூன் சாக் யோலை கைது செய்வதற்கான முதல் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், இந்த இரண்டாவது முயற்சி வெற்றியில் முடிந்தது.
யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் சிலர் கதறி அழுதனர். ஒரு வழியாக யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுவிட்டாலும், விசாரணையை அதிகாரிகள் எவ்வாறு கையாள்வார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் தென் கொரிய அரசியல் விமர்சகர்கள். தென் கொரியாவில் வலுவான அடித்தளத்துடன் இருக்கும் பழமைவாத சக்திகள், தீவிர வலதுசாரி தலைவரான யூன் சாக் யோலை காக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.