கடற்படை பயன்பாட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க்கப்பல்களை, மும்பை கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கடற்படை பயன்பாட்டுக்காக பி17ஏ ரகம் மற்றும் பி15பி ரக கப்பல்கள் தயாரிக்க மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த இரு கப்பல்களின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கி கொடுத்தது. அதன்படி போர்க்கப்பல் மேற்பார்வை குழு கண்காணிப்பில், உலகத்தரத்துக்கு இணயைாக இந்த 2 போர்க்கப்பல்களும் உருவாக்கப்பட்டன.
பி17ஏ ரக கப்பலான ஐஎன்எஸ் நீல்கிரி கப்பல் கடலில் எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் நெருங்கினால் இதில் உள்ள சென்சார் கருவிகள் உடனடியாக கண்டுபிடித்து எச்சரிக்கை விடுக்கும். அவற்றை தாக்குதவதற்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் இந்த கப்பலில் உள்ளன. இந்த போர்க்கப்பலுக்கு உதவியாக எந்த துணை போர்க்கப்பல்களும் செல்லத் தேவையில்லை. எங்கும் தனியாக செல்லும் முன்னணி கப்பலாக இது கடற்படையில் இருக்கும்.
அதேபோல் பி15 பி ரகத்தில் ஐஎன்எஸ் சூரத் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் மற்றும் பராக்-8 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவமுடியும். மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஆயுதங்களும், சென்சார்கள் இதில் உள்ளன. கப்பலின் அடிப் பகுதியில் சோனார் ஹம்சா என்ஜி, டார்பிடோ ஏவுகணைகளை ஏவும் ட்யூப் லாஞ்சர், ஏஎஸ்டபிள்யூ ராக்கெட் லாஞ்சர் ஆகியைவை இந்த கப்பலில் உள்ளன.
இந்திய கடற்படையின் முந்தைய போர்க்கப்பல்களை விட அதிகளவிலான வசதிகள், இந்த புதிய போர்க்கப்பல்களில் உள்ளன. எதிரி படைகளின் தாக்குதலையும் தடுக்கும் திறனும் இந்த போர்க்கப்பலில் உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6-வது மற்றும் கடைசி பி75 ஸ்கார்பீன் ரக நீர் மூழ்கி கப்பலுக்கு ஐஎன்ஸ் வக்ஷீர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த 3 போர் கப்பல்களையும், மும்பை கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்ஸ் சூரத், ஐஎன்எஸ், நீல்கிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய 3 போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் இன்றைய தினம் கடற்படை வரலாற்றிலும், தற்சார்பு இந்தியா திட்டத்திலும் மிக முக்கியமான நாள். இந்தியாவில் கடற்படைக்கு புதிய பலம் மற்றும் தொலைநோக்கை அளித்தவர் சத்ரபதி சிவாஜி மகாராஜ். அவர் பிறந்த மண்ணில், 21-ம் நூற்றாண்டு இந்திய கடற்படையை வலுவாக்க மத்திய அரசு இன்று முக்கிய முடிவெடுத்துள்ளது. முதல் முறையாக 3 போர்க்கப்பல்கள் ஒரே நாளில் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 3 போர்க் கப்பல்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது நமக்கு பெருமையான விஷயம். இந்த 3 கப்பல்கள் தயாரிப்பில் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நீண்ட கடற்பயணம், கடல் வணிகள், கடற்படை மற்றும் கப்பல் கட்டும் தொழில் ஆகியவற்றில் இந்தியாவுக்கு வளமான வரலாறு உள்ளது. தற்போது உலகில் உள்ள கடற்சார் சக்தியில் இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்து வருகிறது. சோழ வம்சத்தின் சக்திவாய்ந்த கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐஎன்எஸ் நீல்கிரி, குஜராத் துறைமுகங்கள் இந்தியாவை மேற்கு ஆசியாவுடன் இணைத்ததை நினைவூட்டும் ஐஎன்எஸ் சூரத், பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய 3 போர்க் கப்பல்களும் இந்தியாவின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் மேம்படுத்தும்.
விரிவாக்கம் என்று இல்லாமல் வளர்ச்சி என்ற உணர்வுடன் இந்தியா செயல்படுகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் திறந்த வெளி மற்றும் பாதுகாப்பான கடற்பயணத்துக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கிறது.
‘‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’’ என்ற மந்திரத்தைதான் ஜி20 அமைப்புக்கு இந்திய தலைமையேற்றபோது வலியுறுத்தியது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தொலைநோக்கைதான், கரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் இந்தியா குறிப்பிட்டது. உலக பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு கடற்சார் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு தடையற்ற கப்பல் போக்குவரத்து, கடலோர பாதுகாப்பு, வர்த்தக விநியோக பாதைகளை பாதுகாப்பது மிக முக்கியம். தீவிரவாதம், ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதில் உலக நாடுகளுடன் இணைந்து இந்திய செயல்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியை பாதுகாப்பதில் இந்திய முன்னணி நாடாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 33 போர் போர்க்கப்பல்கள், 7 நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.25 லட்சம் கோடியை கடந்து விட்டது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ராணுவத்தினர் நலனில் அக்கறை: இந்திய ராணுவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ராணுவ தினத்தில், இந்திய ராணுவத்தின் வீரத்தை நாம் மதிக்கிறோம். நமது நாட்டின் பாதுகாப்பில் ராணுவம் உறுதுணையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வீரர்களின் தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம். உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாக இந்திய ராணுவம் உள்ளது. நமது எல்லைகளை பாதுகாப்பதோடு, இயற்கை பேரிடரின் போதும், ராணுவத்தினர் மனிதாபிமான உதவிகளை அளிக்கின்றனர். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. ராணுவத்தை நவீனமயமாக்குவதில் பல சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். அது வரும் காலங்களிலும் தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.