ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துவதும், இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வருவதும் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் கஞ்சா, போதை மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி பண்டல்கள், மஞ்சள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் இலங்கைக்கு ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக கள்ளத்தனமாக கடத்துவது அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் இலங்கை – இந்திய கடல் பகுதியில் குறுகிய நேரத்தில் பயணிக்கக்கூடியது ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியாகும். மேலும் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட கடல் பகுதி வழியாகவும் இலங்கைக்கு கடத்தல் நடந்து வருகிறது.
இந்திய கடல் பரப்பினை கண்காணிக்க இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல்படை, சுங்கத்துறை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் உள்ளனர். மேலும் மத்திய, மாநில உளவுப்பிரிவுகள், உள்ளூர் போலீஸாரும் கடத்தலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதே போல் இலங்கை கடற்பகுதியில் இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல் படை மற்றும் பல பிரிவுகள் இயங்கி வருகின்றன.
இரு நாடுகளைச் சேர்ந்த இத்தனை பாதுகாப்பு பிரிவுகளின் கண்காணிப்பினையும் மீறி ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் கடல் வழியாக கடத்தல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இணையாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படும் நிகழ்வுகளும் அதிகரித்தபடியே உள்ளது.
இத்தகைய கடத்தல் சம்பவங்களில் வெளிநாடுகளில் இருந்து விமானத்தின் கடத்தி வரப்படும் தங்கத்தினை விமான நிலையத்தில் இயங்கும் சுங்கத்துறை அவ்வப்போது பறிமுதல் செய்தாலும், கடல் வழியாக கடத்தி வரும் அளவு இதைவிட மிக அதிகமாக உள்ளது. இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக நடைபெறும் தங்க கடத்தல் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரகசிய தகவல்கள் மூலம் கண்டறிந்து கடத்தி வரப்படும் தங்கத்தை அவ்வப்போது கைப்பற்றி வருகின்றனர். கடந்தாண்டில் மட்டும் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு சுமார் 100 கிலோவிற்கும் அதிகமான தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது, பல்வேறு கடத்தல் சம்பவங்கள் பிடிப்பட்டதன் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்திலேயே இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட இருந்த ரூ.7.50 கோடி மதிப்புள்ள 11.300 கிலோ தங்ககட்டிகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று தூத்துக்குடி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட 5 கோடி மதிப்பிலான களைக்கொல்லி பூச்சி மருந்தினை யாழ்ப்பானம் பகுதியில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை சர்வதேச துறைமுகத்திற்கு பல நாடுகளின் கப்பல்கள் வந்து செல்கின்றன. அந்த நாட்டிற்கு விமானங்கள் மூலமும் அதிகளவில் தங்க கடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு இலங்கைக்குள் வரும் தங்க கட்டிகள் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படுகிறது. இலங்கையில் உள்நாட்டு போருக்கு முன்பு வரை தங்க கடத்தல் என்பது அரிதாகவே இருந்தது. அதன் பின் பாக் நீரிணை பகுதி வழியாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தும் சம்பவங்கள் தொடர்கிறது.
இந்த தங்க கடத்தலில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள் சர்வதேச கடத்தல் கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இலங்கை மற்றும் இந்திய மீனவர்களில் சிலரை இதற்கென பயன்படுத்தி இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தையும், இங்கிருந்து இலங்கைக்கு போதை பொருள் உள்ளிட்டவற்றையும் கடத்தி வருகின்றனர். இந்த தங்கக் கடத்தலில் இலங்கை மற்றும் இந்திய அரசியல் பிரமுகர்கள் சிலரும், சர்வதேச கடத்தல் கும்பலும் தொடர்ந்து கடத்தலில் ஈடுபடுகிறது. ஆனால் இதுவரை கடத்தலில் ஈடுபட்டு சிக்குபவர்கள் மீனவர்களும், கூலிக்கு கடத்துபவர்களும் மட்டுமே மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், சுங்கத்துறையினர், பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
கடத்தல் கும்பல் தலைவர்களை தீவிர புலனாய்வு செய்து இதுவரை கைது செய்ததாக ஒரு சம்பவமும் தெரியவில்லை. கடத்தல் முக்கிய புள்ளிகளை கண்டறிந்து இனியாவது கடத்தலை தடுக்க மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் முன்வருவார்களா என்ற கேள்வி தொடர்கிறது.