மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, காணும் பொங்கல் பண்டிகையான நாளை (ஜன.16) நடக்கிறது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைகளுக்கு கார், டிராக்டர், ஆட்டோ, பைக், தங்க காசு என்று விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளதால், இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரான மதுரை ஆன்மிகம், அரசியல், கலை, இலக்கியம், தொன்மையான நாகரிகப் பெருமைகளுக்கு மட்டுமில்லாது பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கும் புகழ்பெற்றது. இதனால், பொங்கல் என்றாலே தமிழக மக்களுக்கு நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், பாரம்பரியமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருவதால் உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக சுற்றுலாப் பயணிகளும் திரண்டு வருவார்கள்.
வீரத்தையும், விவேகத்தையும் முன்நிறுத்தி நடக்கும் இந்த போட்டி, தன்னெழுச்சியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெறத்தொடங்கி உள்ளது. கடந்த சில ஆண்டாகவே நேரடியாக ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண அலங்காநல்லூருக்கு மக்கள் வருவது அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னை, பெங்களூர், மும்பை மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் தமிழர்கள் வருகிறார்கள். அதனால், இந்த ஆண்டு நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.
நேற்று அவனியாபுரம், இன்று பாலமேடு ஜல்லிக்கட்டுகளைத் தொடர்ந்து, உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை நடக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த ஜல்லிக்கட்டு காளைகள் இந்த போட்டியில் பங்கேற்பது, இந்தப் போட்டி மீது பார்வையாளர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
வெற்றியையும், பரிசுப் பொருட்களையும் தாண்டி, இந்தப் போட்டியில் களம் காணுவதையே, காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் பெருமையாக கருதுவார்கள். அதனால், ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் காளைகளை இறக்கவும், காளைகளை அடக்க களம் காணவும் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களிடம் கடும் போட்டி நிலவும். இந்த ஆண்டு சுமார் 1,000 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகிறார்கள். இந்தப் போட்டியை நாளை காலை 7 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்.
அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகிக்கிறார்கள். ஆட்சியர் சங்கீதா தலைமையில் வருவாய்துறை, கால்நடை துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள். விழா மேடை, முக்கியப் பிரமுகர்கள் கேலரி, வெளிநாட்டினர் அமருவதற்கு தனி கேலரி மற்றும் பார்வையாளர்கள் அமருவதற்கு வாடிவாசல் முதல் மாடுகள் சேகரிக்கும் வரை சுமார் அரை கி.மீ., தொலைவுக்கு பிரம்மாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவிர, அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள வீட்டின் மாடிகளும், போட்டி நடக்கும்போது, தற்காலிக கேலரிகளாக மாறிவிடும். கேலரிகளில் அமர்ந்து போட்டியை பார்க்க முடியாதவர்களுக்கு ஆங்காங்கே பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று அழைத்துவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றும், அதிகாலை முதலே கால்நடை துறை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகே வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படுகிறது. அதற்காக, மண்டல இணை இயக்குநர் சுப்பையன் தலைமையில் பல்வேறு கால்நடை மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிப்பெறும் காளைகளுக்கு, நிச்சயப்பரிசுடன், தங்க காசு, சைக்கிள், அண்டா, பிளாஸ்டிக் சேகர்கள், மெத்தை, வேஷ்டி, துண்டு, பட்டு சேலை, அயன்பாக்ஸ், கிப்ட் பாக்ஸ், ரொக்கப்பணம், நாட்டு ஆடு, கோழி போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த மாடுபிடிவீரர், காளைக்கு கார், டிராக்டர், இரு சக்கர வாகனம், ஆட்டோ போன்ற விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது. கார், டிராக்டர் போன்றவை, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி சார்பில் வழங்கப்படுகிறது. துணை முதல்வர் உதயநிதி, போட்டிய தொடங்கி வைத்து 2 மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்போது, அவர் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் காளை, மாடுபிடி வீரர்களுக்கு தங்ககாசு போன்றவை வழங்கி பாராட்டுகிறார்.
துணை முதல்வர் உதயநிதி வருவதால், அவருக்கு வரவேற்பு வழங்கும் வகையில் ஊமச்ச்சி குளம் முதல் அங்காநல்லூர் வரை வரவேற்பு தோரணங்கள், உள்ளூர் கட்சியினர் வரவேற்பு போன்றவற்றை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் புறநகர் கட்சி நிர்வாகள் ஏற்பாடு செய்துள்ளனர். தென் மண்டல ஐஜி, பிரேம்ஆன்ந்த சின்கா, மேற்பார்வையில் எஸ்பி-க்கள் அரவிந்த்(மதுரை), சிவபிரசாத்(தேனி) ஆகியார் தலைமையில் ,2500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
விவசாயத்தை ஊக்குவிக்க முதல் முறையாக ‘டிராக்டர்’ பரிசு: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல் பரிசு பெறும் காளைகளுக்கு இதுவரை கார் பரிசு வழங்கப்பட்டு வந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டில் மட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், தொழில் அதிபருமான பொன்குமார் , நாட்டு மாடுகள் வளர்ப்பையும், விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக கடந்த 5 ஆண்டாக சிறந்த காளைக்கு கூடுதல் சிறப்பு பரிசாக கன்றுடன் கூடிய நாட்டு பசு மாடு வழங்கி வந்தார்.
இந்த ஆண்டு முதல், முதல் பரிசு பெற்ற காளைகளுக்கு ‘டிராக்டர்’ பரிசு வழங்கப்பட்டு வருகிறது. காளைகளை வளர்ப்போர், பெரும்பாலும் விவசாயம் செய்து வருவதால் அவர்களை ஜல்லிக்கட்டு காளைகளை விரும்பி வளர்க்கிறார்கள். அவர்களுடைய விவசாயத்தை ஊக்குவிக்குவிக்கும் வகையிலும், விவசாயப்பணிகள் உதவிக்காகவும் இந்த ஆண்டு முதல் சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசு வழங்கப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.