சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டும் வகையில் பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“திருவள்ளுவர் தினத்தன்று, நமது நாட்டின் தலைசிறந்த தத்துவஞானிகள், கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரை நாம் நினைவு கூர்கிறோம். அவரது குறல்கள் தமிழ் கலாசாரத்தின் சாரத்தையும், நமது தத்துவ பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன.
அவரது போதனைகள் அறம், இரக்கம் மற்றும் நீதியை வலியுறுத்துகின்றன. அவரது காலத்தால் அழியாத படைப்பான திருக்குறள், பல்வேறு பிரச்சினைகள் குறித்த ஆழமான நுண்ணறிவுகளை வழங்கி, உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. நமது சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் தொடர்ந்து கடினமாக உழைப்போம்.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.