காஞ்சிபுரம் கோயில் நகரமாக விளங்குவதால் ஆன்மிக சுற்றுலா மற்றும் புகழ்பெற்ற பட்டுச் சேலைகள் வாங்குவதற்காக நாள் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால், நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், காஞ்சிபுரம் – சென்னை செல்லும் சாலையின் இடையில் புதிய ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் இருந்தது.
இப்பகுதியில் ரயில் செல்லும்போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் கம்மாளத் தெரு, நான்கு ராஜவீதிகளில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர்.
இதன் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு ரூ.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேலும், கடந்த 2022-ம் ஆண்டு முதல் மேம்பாலம் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. இதனால், நான்கு ராஜவீதிகளில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது. இதையடுத்து, போக்குவரத்து இல்லாத பழைய சாலையில் இருந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. மேலும், ரயில்வே கேட் அருகே வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் மண் கொட்டி மேடு அமைக்கப்பட்டது.
ஆனால், புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள அன்னை இந்திரா நகர், கனக துர்கை அம்மன் நகர் விரிவாக்க பகுதிகளில் உள்ள சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் உள்ளூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக நகரப்பகுதிக்குள் வந்து செல்ல வேண்டும் என்றால், சுமார் 2 கி.மீ. சென்று, ரயில்வே மேம்பாலத்தை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால், உள்ளூர் மக்களின் இலகுரக வாகனங்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் பழைய ரயில்வே கடவுப்பாதை அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், ரயில்வே நிர்வாகமும் மேற்கண்ட பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்கியது. ஆனால், சுரங்கப்பாதை அமைப்பதற்கான கான்கிரீட் பாக்ஸ் தயாரிக்கும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. பின்னர், பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன.
இதனால், மேற்கண்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். அதனால், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வழக்கறிஞர் ராஜ்கமல் கூறியதாவது: ரயில்வே கடவுப்பாதை மூடப்பட்டதால் உள்ளூரை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் நகருக்குள் செல்ல வாகன போக்குவரத்து மிகுந்த ரயில்வே மேம்பாலத்தை கடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும், பள்ளியில் மாலையில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் மாணவிகள் இரவு நேரத்தில் மேம்பாலத்தை கடக்கும்போது அச்சப்படுகின்றனர்.
இதுதவிர, அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும்போது ஆம்புலன்ஸ் வாகனங்களும் ரயில்வே மேம்பாலத்தை கடந்து 3 கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு இந்திராநகர் பகுதிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. சுரங்கப்பாதை இல்லாததால் மேற்கண்ட பகுதிக்கு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.
இதுதவிர, பழைய கடவுப்பாதை பகுதியில் அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு, அம்மனை வழிபடுவதற்காக பெண்கள் வந்து செல்லும் நிலையில், இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளதால், சிலர் இங்கு மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சுரங்கப்பாதை அமையும் பட்சத்தில் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் ஏற்படும். இதன்மூலம், சமூக விரோத செயல்கள் தடுக்கப்படும். பெண்களும் அச்சமின்றி கோயிலுக்கு வந்து செல்வர். அதனால், கிடப்பில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை மீண்டும் தொடங்கி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றார்.