சத்தீஸ்கரில் ரூ.32 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த 4 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் மண்டலம் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. நக்சல் ஆதிக்கத்தை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டில் மட்டும் 792 நக்சல்கள் சரணடைந்தனர். இந்நிலையில், நாரயண்பூர் மாவட்டத்தில் 4 நக்சல்கள் நேற்று சரணடைந்தனர்.
இதுகுறித்து நாராயண்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாத் குமார் நேற்று கூறியதாவது: ஒரு தம்பதி மற்றும் 2 பேர் என 4 நக்சல்கள் காவல் துறை அதிகாரிகள் முன்பு சரண் அடைந்துள்ளனர். இதில் அராப் (எ) கமலேஷ் (35) மற்றும் மெய்னு (எ) ஹேம்லால் கோரம் (35) ஆகிய இருவரும் நக்சல் அமைப்பின் மண்டல குழு உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு தண்டேவாடா மாவட்டத்தில் (இப்போது சுக்மா மாவட்டம்) தட்மெட்லா என்ற இடத்தில் நிகழ்ந்த படுகொலை சம்பவத்தில் 76 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இதில் கமலேஷுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021-ல் 5 வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமான புகின்ட்டார் குண்டு வெடிப்பு வழக்கில் ஹேம்லால் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் தவிர ரஞ்சித் லெகமி (எ) அர்ஜுன் (30) அவரது மனைவி கோசி (எ) காஜல் (28) ஆகிய இருவரும் சரணடைந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய இவர்கள் 4 பேரின் தலைக்கும் தலா ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
மனிதத்தன்மையற்ற சித்தாந்தம் மற்றும் அப்பாவி பழங்குடி மக்களை சுரண்டும் நக்சல் அமைப்பினரின் செயலால் அதிருப்தி அடைந்தோம் என சரணடைந்தவர்கள் தெரிவித்தனர். சரணடைந்தவர்களுக்கு முதல்கட்டமாக தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, அரசின் கொள்கைப்படி அவர்களுடைய மறுவாழ்வுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.