டெல்லியில் கடும் மூடுபனி: 45 ரயில்கள் தாமதம்

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை (ஜன. 11) காலை அடர்த்தியான மூடுபனி நிலவியதன் காரணமாக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 45 ரயில்கள் தாமதமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குளிர்காலம் என்பதால் இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. வட மாவட்டங்கள் பலவற்றிலும் குளிர் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த பல மாதங்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நிலவி வந்த நிலையில், தற்போதைய பனிப்பொழிவு காரணமாக எதிரே இருப்பதை தெளிவாக பார்க்க முடியாத நிலை உள்ளது. டெல்லி சஃப்தர்ஜங் சாலை பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை உள்ளவற்றை மட்டமே காண முடிந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேரம் செல்லச் செல்ல காட்சித் தெளிவின் தொலைவு சற்று அதிகரித்து காலை 7.30 மணி வரை இது 200 மீட்டராக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, டெல்லியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அடர் பனி மற்றும் மாசு காரணமாக, 45 ரயில்கள் தாமதமானதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் வானிலைத் துறை கணித்துள்ளது. ஈரப்பதம் காலை 8.30 மணிக்கு 100 சதவீதம் இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.