புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
எண் 24, அக்பர் சாலை, புதுடெல்லி என்ற முகவரியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் ஏற்கனவே இயங்கி வந்தது. இந்நிலையில், கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம் 9A, கோட்லா சாலை, புதுடெல்லி என்ற முகவரியில் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நினைவாக ‘இந்திரா பவன்’ என இந்த தலைமையகத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் இணைந்து ரிப்பன் வெட்டி தலைமையகத்தை சோனியா காந்தி திறந்துவைத்தார். இவ்விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கட்சித் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கொடியை மல்லிகார்ஜுன கார்கே ஏற்றினார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்துக்குள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் கட்சி குத்து விளக்கேற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “மிகவும் முக்கியமான ஒரு தருணத்தில் நாம் நமது புதிய தலைமையகத்தைத் திறந்து வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று பேசும்போது, 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை; அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறி இருந்தார்.
இந்தக் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது இந்த நாட்டின் மண்ணிலிருந்து எழுந்தது. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். மோகன் பகவத் நேற்று பேசும்போது, அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது. அத்தகைய மதிப்பீடுகள், இந்தக் கட்டிடத்தில் பிரதிபலிக்கப்படுவதைக் காணலாம்” எனத் தெரிவித்தார்.
புதிய தலைமையகம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான “இந்திரா பவன்” ஜனநாயகம், தேசியவாதம், மதச்சார்பின்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸின் 140 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றை அடையாளப்படுத்தும் விதமாக இங்குள்ள சுவர்கள் உண்மை, அகிம்சை, தியாகம், போராட்டம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் மகத்தான கதையை விவரிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் புதிய தலைமையகத்தைத் திறப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், “இது ஒரு புதிய தொடக்கம். எங்களுக்கு ஒரு புதிய தலைமையகம் கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது கட்சிக்கும் நாட்டிற்கும் சிறந்த விஷயங்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில், “இது எங்கள் கனவு, இது எங்கள் கோயில். இன்று இங்கு இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.” என கூறினார்.