டெல்லி சட்டசபை தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில் புதுடெல்லி சட்டசபை தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று (புதன்கிழமை) அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய தனது குடும்பத்தினர் மற்றும் டெல்லியின் ஆம் ஆத்மி பெண் ஆதரவாளர்கள் மற்றும் சகோதரிகளுடன் அவர் வந்திருந்தார். மேலும் அங்குள்ள அனுமன் கோவில் மற்றும் வால்மீகி கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு கெஜ்ரிவால் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் கெஜ்ரிவால், இந்த முறை பா.ஜ.க.வின் பர்வேஷ் வர்மா மற்றும் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் ஆகியோரை எதிர்கொள்கிறார்.

இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் மீதான மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. முன்னதாக டெல்லி யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசும் தற்போது ஒப்புதல் அளித்திருப்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.