மதுரை: மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விஐபிகளின் கார்களால் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றுவது சிரமம் ஏற்படுகிறது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று (ஜன.15) காலை 7. 30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக அமைச்சர் பி மூர்த்தி ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு சுற்றிலும் 50 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்படுகின்றனர். போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை போட்டியில் பங்கேற்றுள்ளன. கால்நடைத் துறையினர் பதிவு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து அனுப்புகின்றனர். பாலமேடு காளீஸ்வரி, மதுரை மு.முருகலட்சுமி உள்ளிட்ட பெண்களும் தங்களது காளைகளை அவிழ்த்தனர்.
இதனிடையே, ஜல்லிகட்டு போட்டியில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் ஜல்லக்கட்டு மேடைக்கு பின்பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் அதிகாரிகள், விஐபி கார்கள் நிறுத்தபட்டதால் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்வதில் அவ்வப்போது சிரமம் ஏற்பட்டது. பிறகு போலீஸார் கார் ஓட்டுநர்களை அழைத்து சீரமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.