லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று மேலும் அதிகமாகும் என்று முன்னெச்சரிக்கை, நகரின் பல பகுதிகளும் அதி தீவிர அச்சத்தை எதிர்கொண்டுள்ளன. இதனிடையே, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
காற்றின் வேகம் அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்பால், ஏற்கெனவே எரிந்து வரும் நான்கு காட்டுத் தீயை மேலும் தீவிரமாக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமைக்கு பின்பு காற்றின் வேகம் குறையும் என்ற நம்பிக்கையால் தீயின் தீவிரம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், தீயைக் கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்களின் பணிகளைக் குறைக்க மழையின் தயவை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில், காட்டுத் தீக்கு 25-வது நபர் உயிரிழந்துள்ளதை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டி மருத்துவ அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நகரின் வடக்கில் உருவான ஈட்டன் காட்டுத் தீ பாதிப்பில் சிக்கியவர்கள், இந்தக் காட்டுத் தீ 14,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பை ஏரித்துள்ளது. இதில் 35 சதவீதம் தீ, தீயணைப்பு வீரர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நகரின் மேற்கு பகுதியில் உருவான பெரிய அளவிலான பாலிசேட்ஸ் காட்டுத் தீக்கு 23,000-க்கும் அதிகமான பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இதில் 18 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இரண்டு காட்டுத் தீ இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், ஈட்டன் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சலுகை, பாலிசேட்ஸ் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை அவர்கள் எப்போது வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்பது தங்களுக்கு தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வெளியேற்ற உத்தரவால் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியே தங்கியுள்ளனர். இரவில் ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது.
அதேநேரத்தில் புதன்கிழமை காற்று தீவிர பாதிப்புக்கு பின்பு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காற்றின் தாக்கம் குறையும் என்றாலும், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காட்டுத் தீயை உண்டாக்கியதாக கூறப்படும் சாண்டா அன்னா காற்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் உருவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது அச்சத்தைக் கூட்டியுள்ளது.