புதுடெல்லி: “1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறி இருப்பது, ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல்; இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கமுடியாது.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவன்’ அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தியால் டெல்லியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “மிகவும் முக்கியமான ஒரு தருணத்தில் நாம் நமது புதிய தலைமையகத்தைத் திறந்து வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று பேசும்போது, 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை; அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறி இருந்தார்.
இந்தக் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது இந்த நாட்டின் மண்ணிலிருந்து எழுந்தது. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். மோகன் பாகவத் நேற்று பேசும்போது, அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது. அத்தகைய மதிப்பீடுகள், இந்தக் கட்டிடத்தில் பிரதிபலிக்கப்படுவதைக் காணலாம்.
நியாயமாக நடக்கும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது என்று நினைக்காதீர்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர்கள் நம் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இப்போது நாங்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுகிறோம்.
மகாராஷ்டிரா தேர்தல்களில் ஏதோ தவறு நடந்துள்ளது என்று நான் தெளிவாகக் கூறினேன். தேர்தல் ஆணையம் செயல்படும் விதம் எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வாக்காளர்கள் திடீரெனத் தோன்றுவது சிக்கலானது.
சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளுடன் கூடிய வாக்காளர் பட்டியலை வழங்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை. இருப்பினும், இந்தத் தகவலை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. வாக்காளர் பட்டியலை வெளிப்படையானதாக மாற்ற தேர்தல் ஆணையம் ஏன் மறுக்கிறது? பட்டியலை எங்களுக்கு வழங்காமல் இருப்பதன் நோக்கம் என்ன? அதை ஏன் அவர்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்? வெளிப்படைத்தன்மையை வழங்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை, இது ஏன் நடந்தது என்பதை விளக்குவது அவர்களின் புனித பொறுப்பு. ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் ஒவ்வொரு எதிர்க்கட்சி உறுப்பினரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று இது. நமது தேர்தல் முறையில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.
இந்த கட்டிடத்தில், திறமைகளின் ஆழத்தை நீங்கள் காண்பீர்கள். இந்தியாவின் ஆன்மாவில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். இங்கே ஒரு வளமான வரலாறு உள்ளது; உண்மையில், நமது அடையாளத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். காங்கிரஸ் உறுப்பினர்களாகிய நமக்கு, நாம் யார், நமது பாரம்பரியம் என்ன, நமது வரலாறு என்ன, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை அறிந்து கொள்வது அவசியம். காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பின் அடித்தளத்தில் உழைத்து இந்த நாட்டின் வெற்றியைக் கட்டியெழுப்பியுள்ளது. இதைத்தான் இந்தக் கட்டிடம் குறிக்கிறது
கட்டிடத்தின் உள்ளே, மகாத்மா காந்தி, சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் எண்ணற்ற தொண்டர்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சர்கள் என பலரை நீங்கள் காண முடியும். அவர்கள் அனைவரும் நமது நாட்டின் அரசியலமைப்புக்கு சேவை செய்து மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள்.
இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதில்லை. தேசியக் கொடியையோ அல்லது அரசியலமைப்பையோ நம்புவதில்லை. அவர்கள் இந்தியாவுக்கு மிகவும் மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளனர். இந்தியா ஒரு ரகசிய சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஒரு நபரால் நடத்தப்பட வேண்டும், நமது நாட்டின் குரல்களை நசுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை மவுனமாக்க அவர்கள் விரும்புகிறார்கள். இதுதான் அவர்களின் நிகழ்ச்சி நிரல். அவர்களை வேறு எந்தக் கட்சியாலும் தடுக்க முடியாது. அவர்களைத் தடுக்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். ஏனென்றால் நாம் ஒரு சித்தாந்தக் கட்சி.
வெளிப்புற சுயத்தில் கவனம் செலுத்தும் மேற்கத்திய உலகத்தைப் போலல்லாமல், உள்முக சுயத்தை புரிந்துகொள்வதை வலியுறுத்தக்கூடியது இந்திய சிந்தனை. நமது மிகப் பெரிய குருமார்களின் புரிதல் அனைத்தும் துல்லியமானது. நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் இயல்பு என்ன? என்பனபோன்ற அடிப்படை கேள்விகளைப் பற்றியே பகவத் கீதை, பகவான் சிவன், குருநானக், துறவி கபீர் போன்றவர்கள் பேசுகிறார்கள்.
இந்தியாவில் நடைபெறும் முக்கியப் போராட்டம் இதுதான். இங்கே ஒன்றோடு ஒன்று மோதும் இரண்டு பார்வைகள் உள்ளன. ஒன்று நமது பார்வை. அது அரசியலமைப்பின் பார்வை. மற்றொன்று ஆர்எஸ்எஸ்ஸின் பார்வை.
இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று ஒரு பார்வை கூறுகிறது. இந்த இந்திரா பவனில், பட்டியலிடப்பட்ட அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த மொழி – தாழ்ந்த மொழி, கலாச்சாரம் அல்லது சமூகம் என்றில்லாமல், இந்த கட்டிடம் இந்த பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது.
மறுபுறம், ஒரு மையப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் புரிதலின் பார்வை உள்ளது. சுதந்திரப் போராட்டம் குறித்தும் தேசம் குறித்தும் அவர் என்ன நினைக்கிறார் என்பதை நமக்குத் தெரிவிக்கும் துணிச்சல் மோகன் பாகவத்துக்கு இருக்கிறது. நேற்று அவர் கூறியது தேசத்துரோகம். ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டம் மதிப்பற்றது என்றும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் மதிப்பற்றது என்றும் அவர் கூறுவாரேயானால் அது தேசத்துரோகம். வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு பேசியவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார். 1947-ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்று சொல்வது ஒவ்வொரு இந்தியரையும் அவமதிப்பதாகும். இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கமுடியாது” என தெரிவித்தார்.