தைப் பொங்கல் என்றாலே எல்லோருடைய நினைவுக்கும் வருவது கரும்பு.
கன்னல் என இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரும்பு தமிழர் திருநாளின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்து வருகிற பின்னனியில், கரும்புக்கும் தமிழ்நாட்டுக்குமான சில ஆழமான பந்தம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
நூறாண்டுகள் கடந்த சரித்திரம் கொண்ட ஒரு ஆராய்ச்சி நிறுவனம் கரும்புக்காகவே தமிழ்நாட்டில் இயங்கி வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே அதாவது இன்றிலிருந்து 111 ஆண்டுகளூக்கு முன்பு கோயம்புத்தூர், வீரகேரளம் பகுதியில் நிறுவப்பட்டிருக்கிறது கரும்பு ஆராய்ச்சி நிறுவனம்.
தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி புத்திரப்பிரதாப்பிடம் இந்த நிறுவனம் குறித்தும், அதன் பணிகள் குறித்தும் கேட்டோம்..
“1910 வாக்கில் நாட்டில் சர்க்கரைக்கு வெளிநாட்டு இறக்குமதியையே நம்பியிருக்கிற அவல நிலை இருந்திருக்கு. அதை எதிர்த்து போராட்டங்களை அறிவிச்சிருக்காங்க சில தலைவர்கள். குறிப்பா மதன் மோகன் மாளவியா தலைமையிலான தீவிரமான போராட்டத்தின் பின்னனியிலதான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கு.
போராட்டம் வட இந்தியாவுலதான் வலுவா இருந்த போதும் ஆராய்ச்சி மையம் கோயம்புத்தூர்ல தொடங்கப்பட்டதுக்கும் ஒரு காரணம் இருக்கு. பொதுவா பயிர்கள்ல புது ரகங்கள் உருவாக்கணும்னா பூப்பதும் விதை பிடிப்பதும் அவசியம். கோவையின் தட்பவெப்ப நிலை இயற்கையாகவே பூப்பதற்கும் விதை பிடிப்பதற்கும் ஏற்றதா இருந்ததால் தேர்தெடுத்திருக்காங்க. இன்னைக்கும் கோவை தாண்டி இந்தியாவில் எங்கும் கரும்பு அவ்வளவு நன்றாகப் பூப்பதில்லை, அப்படியே பூத்தாலும் விதை பிடிப்பதில்லை. நிறுவப்பட்ட காலம் தொடங்கி இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான புதிய கரும்பு ரகங்கள் இங்க உருவாக்கப்பட்டிருக்கு. இதுல சுமார் 200 ரகங்கள் கரும்பு விவசாயிகளிடம் இன்னைக்குத் தேதிக்குப் பிரபலமாக இருக்கின்றன.
சுதந்திரத்துக்கு முன்னாடி நாம இங்கு உருவாக்கின கரும்பு ரகங்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகள்ல பயிரிடப்பட்டு வந்ததற்கான சான்றுகள் நம்மகிட்ட இருக்கு. இப்பவும் பல ஆசிய, ஆப்ரிக்க நாடுகள்ல நம்முடையை இந்த ’கோ’ (கோயம்புத்தூர்) ரக கரும்புகள்தான் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்தியாவை எடுத்துகிட்டீங்கன்னா, வட மாநிலங்களின் கரும்பு பரப்பில் 80 சதவிகிதத்துக்கும் மேல். இங்க உருவாக்கப்பட்ட கோ 0238 ரகம்தான் பயிரிடப்படுது. தென் மாநிலங்கள்ல கோ 86032 ரகம்தான் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல பயிரிடப்படுது’’ என்கிறார் இவர்.
’ஏனுங்க, சாப்டுப்புட்டு போங்க’ என வார்த்தைகளில் அவ்வளவு இனிப்பாக உபசரிப்பவர்கள் கோயம்புத்தூர் மக்கள். தட்பவெப்ப நிலையும் கரும்புக்கு உகந்ததாக இருக்கிறதாம். இனி யாராவது கோயம்புத்தூர்னா குசும்பு எனச் சொல்வீர்களா என்ன?