இந்தியாவில் நடப்பு ஆண்டில் இணையதள பயனாளர் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கம் (ஐஏஎம்ஏஐ) மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கன்டர் சார்பில் ‘இந்தியாவில் இணையதளம் 2024’ என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 2024-ம் ஆண்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 88.6 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8% அதிகம். இந்த எண்ணிக்கை 2025-ல் 90 கோடியைத் தாண்டும்.
நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோரில் 55% பேர் (48.8 கோடி) கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 39.7 கோடியாக இருந்தது. இணையதள பயன்பாட்டாளர்களில் 47% பேர் பெண்கள்.
சராசரியாக இந்தியர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இதில் கிராமவாசிகள் 89 நிமிடங்களும் நகரவாசிகள் 94 நிமிடங்களும் பயன்படுத்துகின்றனர்.
இணையதள பயன்பாட்டில் கேரளா (72%), கோவா (71%), மகாராஷ்டிரா (70%) ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. பிஹார் (43%), உத்தர பிரதேசம் (46%), ஜார்க்கண்ட் (50%) ஆகிய மாநிலங்கள் கடைசி 3 இடங்களில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.