Bhuvneshwar Kumar | இந்திய அணியின் ஸ்டார் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கும் நிலையில், அவருடைய இடத்துக்கு இந்திய அணியின் ஸ்டார் பந்துவீச்சாளராக இருந்த புவனேஸ்வர் குமார் தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்த அவர், அண்மைக்காலமாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதில்லை. ஐபிஎல் வந்தபிறகு சிறப்பாக ஆடிய இளம் பந்துவீச்சாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியதால், புவனேஷ்வர் குமார் ஓரங்கட்டப்பட்டார்.
இருப்பினும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் புவனேஷ்வர் குமார், மீண்டும் இந்திய அணிக்கு விளையாடுவது சந்தேகம் என்ற சூழலே நிலவுகிறது. இருப்பினும் அவருக்கு இன்னொரு வாய்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுக்கலாம் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூட புவனேஸ்வர் குமாருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கலாம், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளார். அவருக்கு ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி ஆடிய அனுபவம் இருப்பதால், புவனேஸ்வர் குமாரின் வருகை இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டியில் கடைசியாக ஜனவரி 21, 2022 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார். கடைசி டி20 போட்டியை இந்திய அணிக்காக நியூசிலாந்துக்கு எதிராக 22 நவம்பர் 2022 அன்று விளையாடினார் அவர். 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட புவனேஷ்வர் குமார் ‘ஆட்ட நாயகன்’ விருது பெற்றார். ஆனால் அந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவரது டெஸ்ட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. இதன் பிறகு, புவனேஷ்வர் குமாருக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியில் தங்கள் இடத்தைப் உறுதி செய்துவிட்டனர். இது தவிர முகமது ஷமியும் இருக்கிறார். இவர்களே இந்திய அணி நிர்வாகத்தின் முதல் தேர்வாக உள்ளனர். இதனால், புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்குத் திரும்புவது இப்போது சாத்தியமில்லை. அதுமட்டுமில்லாமல் புவனேஷ்வர் குமார் இப்போது வேகமாக பந்து வீச முடியவில்லை. ஆரம்பத்தில் பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இப்போது ஸ்விங்கும் செய்ய முடியாமல் இருக்கிறார். இதனால் ரசிகர்கள் உள்ளிட்டோர் எதிர்பார்த்தாலும் புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்கு திரும்புவது சாத்தியமில்லை.