இந்திய அணியின் பேட்டிங் கோச் ஆகும் சிதான்ஷு கோடக்? யார் இவர்…? இவரின் அனுபவம் என்ன?

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சில மாதங்களுக்கு பிஸியாக இருக்கப்போகிறது. வரும் ஜனவரி 22ஆம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க இருக்கிறது. அதை தொடர்ந்து, இங்கிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற இருக்கிறது. 

இதை முடிந்தவுடன் அடுத்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி துபாய்க்கு பறக்க இருக்கிறது. பின்னர் மார்ச் மாதம் ஆரம்பிக்கும் ஐபிஎல் தொடர், மே மாதம் வரை நீளும். ஐபிஎல் தொடருக்கு பிறகு, ஜூன் – ஜூலை மாதங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளை விளையாட, இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளர் தேவை

கடந்த சில மாதங்களாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணி, அடுத்தடுத்த தொடர்களில் ஆதிக்கம் செலுத்த பல மாற்றங்களை செய்தாக வேண்டும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, இந்திய அணிக்கான பேட்டிங் பயிற்சியாளரை கண்டறிவது… ஆம், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணிக்கு பிரத்யேகமாக பேட்டிங் பயிற்சியாளர் என்று யாரும் இல்லை. கம்பீருக்கு உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரயான் டென் டோசேட் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சு பயிற்சியாளராக மார்னே மார்கல் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக திலீப் ஆகியோர் உள்ளனர்.

பேட்டிங் பயிற்சியாளராகும் சிதான்ஷு கோடக்?

அந்த வகையில், தற்போது பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும், கௌதம் கம்பீர் பரிந்துரைத்த சிதான்ஷு கோடக் என்பவரையே பிசிசிஐ பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. மூத்த சௌராஷ்டிர பேட்டரான இவர் உள்ளூர் கிரிக்கெட் வட்டாரத்தில் நன்கு பெயர் பெற்ற பயிற்சியாளராக அறியப்படுகிறார். 

யார் இந்த சிதான்ஷு கோடக்?

52 வயதான சிதான்ஷு கோடக், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய போது சிறப்பான வீரராக அறியப்பட்டவர். இவர் இந்திய அணிக்காக விளையாடியதில்லை என்றாலும் சௌராஷ்டிரா அணிக்காக ரன்களை குவித்துள்ளார். 130 முதல் தர போட்டிகளில் விளையாடி 41.76 சராசரியுடன் 8061 ரன்களை குவித்துள்ளார். மேலும், 89 லிஸ்ட் ஏ  போட்டிகளில் 42.23 சராசரியில் 3083 ரன்களையும் குவித்துள்ளார். 2013ஆம் ஆண்டில் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், அதன்பின் தொடரந்து பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்த இவர் அதில் பல்வேறு பொறுப்புகளையும் பெற்றுள்ளார். 

சிதான்ஷு கோடக் அனுபவம் என்ன?

குறிப்பாக, 2019ஆம் ஆண்டில் இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகி, தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். அப்போது, இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை சிதான்ஷு கோடக் பெற்றார். சிதான்ஷு கோடக் தலைமை பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் இந்திய ஏ அணி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலியாவிலும் கூட அப்போது இந்திய ஏ அணி சிறப்பாக செயல்பட்டது.

அதுமட்டுமின்றி, 2023ஆம் ஆண்டில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அயர்லாந்து சென்ற இந்திய அணி 3 டி20 போட்டிகளை விளையாடின. அப்போது தலைமை பயிற்சியாளராக சென்றவர் சிதான்ஷு கோடக் தான். அதேபோல், 2023 தென்னாப்பிரிக்கா உடனான மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடருக்கும் இவர்தான் தலைமை பயிற்சியாளராக இருந்தார். காரணம், அப்போது டெஸ்ட் தொடருக்காக பிரதான பயிற்சியாளர் குழு தயாராகி வந்தது. இவர் ஐபிஎல் தொடரில் கூட பணியாற்றி உள்ளார். 2016 மற்றும் 2017 ஆகிய சீசன்களில் குஜராத் லயன்ஸ் அணிக்கு உதவி பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். 

சிதான்ஷு கோடக் – ஏன் சரியான தேர்வாக இருப்பார்?

சிதான்ஷு கோடக்கிற்கு பல ஆண்டுகளாக, தேசிய கிரிக்கெட் அகாடமியிலும், உள்ளூர் கிரிக்கெட்டிலும் பரீட்சயம் இருக்கிறது என்பதால் நிச்சயம் புதுப் புது திறமையாளர்களை இந்திய அணிக்குள் கொண்டுவரும் வாய்ப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, இந்திய அணி தற்போது பெரிய மாற்றத்திற்கு தயாராகி வரும் சூழலில், சரியான வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சரியான முறையில் பயிற்சியளிப்பது நீண்ட கால திட்டங்களில் முக்கியமான ஒன்றாகும். இதில் சிதான்ஷு கோடக் சரியானவராக இருப்பார். 

அதுமட்டுமின்றி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் சூழலில், சிதான்ஷு கோடக் போன்ற மூத்த பயிற்சியாளர்கள் அவற்றை சரிசெய்வதற்கான பணியில் இறங்குவதற்கும் சரியாக இருப்பார்கள். மேலும் பல இந்திய வீரர்களுடன் தற்போதே அவருக்கு நல்ல அனுபவம் இருக்கும் சூழலில், தகவல் தொடர்பிலும் எவ்வித சிக்கலும் ஏற்படாது. சிதான்ஷு கோடக்கை பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அறிவிக்கும் என்றும் இந்தியா – இங்கிலாந்து தொடரில் இருந்து அவர் தனது பணியை தொடங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.