இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு

பாலஸ்தீனத்தின் காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் -இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் காசாவில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 46,000 பேர் இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். காசா போரில் ஹமாஸ் தீவிரவாதிகள் 17 ஆயிரம் பேரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் கூறியது.

இதற்கிடையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தன. இதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது.

இந்நிலையில் பாலஸ்தீன சிறைக் கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கவும் காசாவில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளவும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் ஒப்பந்தம் கைழுத்தானது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். தான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் ஹமாஸ் தீவிரவாதிகள் மோசமாக விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அவரது தூதர் ஸ்டீவ் விட்ஃகாப் ஒப்பந்தம் ஏற்பட ஜோ பைடன் குழுவினருடன் இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “மத்திய கிழக்கில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். நன்றி!” என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலிய பிணைக் கைதிகள் நாடு திரும்புவதால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு எதிரான மக்களின் கோபம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வரவேற்பு: இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசாவில் பிணைக் கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இது காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளை வழங்க வழிவகுக்கும் என்று நம்புகிறோம். அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவும், போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.