காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம்: ட்ரம்ப், பைடனுக்கு நெதன்யாகு நன்றி!

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டன. காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டதாக இவ்விரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு அது வரும் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்தா்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இந்த ஒப்பந்தம் காசாவில் சண்டையை நிறுத்தும். பாலஸ்தீன பொதுமக்களுக்கு மிகவும் தேவையான மனிதாபிமான உதவியை அதிகரிக்கும். பணயக்கைதிகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஒப்பந்தத்தின் இறுதி விவரங்கள் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றன. எனினும், இதை ஊக்குவித்ததற்காக பைடனுக்கு நன்றி.” என கூறினார். போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளதை அடுத்து, பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு வாரம் இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், “இந்த காலகட்டத்தில், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக, ஹமாஸ் பிடியில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் 33 பேர் விடுவிக்கப்படுவார்கள். காசாவின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படைகள் கிழக்கு நோக்கி பின்வாங்கும். இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். மேலும், நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் உதவிப்பொருட்கள் ஒவ்வொரு நாளும் காசாவுக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கும். மீதமுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவது, இஸ்ரேலிய துருப்புக்கள் முழுமையாக திரும்பப் பெறுவது, ‘நிலையான அமைதிக்கு’ திரும்புவது போன்றவற்றுக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் 16வது நாளில் தொடங்கும்.” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதில், காசாவில் 46,700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. 23 லட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவில் பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.