கோவளம்: ஹெலிகாப்டர் தளத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அனுமதி பெற்று மீண்டும் ஹெலிகாப்டர் சவாரி சுற்றுலாவைத் தொடர வருவாய்த் துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
கோவளத்தில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 2023ம் ஆண்டு ஹெலிகாப்டர் சவாரி சுற்றுலா தொடங்கப்பட்டது. பின்னர் திடீரென ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சவாரி சுற்றுலா கடந்த 10ம் தேதி மீண்டும் தொடங்கியது. இதில் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1,000 மீட்டர் உயரத்தில் பறந்து 5 நிமிடத்துக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற்று வந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் மக்கள் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், மாவட்டம் நிர்வாகம் உள்ளிட்ட முறையான அனுமதி, பாதுகாப்பு வழிமுறை கள் இல்லாமல் செயல்படுவதாக, ஆட்சியருக்கு திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி புகார் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, மாவட்ட நிர்வாக உத்தரவின்படி நேற்று திருப்போரூர் வட்டாட்சியர் நடராஜன் தலைமையில் கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் முன்னிலையில் வருவாய் துறை அதிகாரிகள் கோவளம் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து சீல் வைத்தனர். அதன் அலுவலகத்தில் அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றையும் ஒட்டியுள்ளனர்.
அந்த நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது: ஏரோ டான் என்ற நிறுவனம் ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற பெயரில் ஜனவரி 12 முதல் 16ம் தேதி வரை ஹெலிகாப்டர் மூலம் பொதுமக்களை கோவளம் முதல் மாமல்லபுரம் வரை ஏற்றி செல்வது கண்டறியப்பட்டது. இந்நிறுவனம் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் உரிய அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்கத் தவறியதால், இந்த ஹெலிகாப்டர் சுற்றுலாவால் எவ்வித அசம்பாவித நிகழ்வு நடக்காமலும், பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதியும் ஹெலிகாப்டர் சேவையை நிறுத்தி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி நிறுவனமானது அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று இயங்க இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து திருப்போரூர் தாசில்தார் நடராஜனிடம் கேட்டபோது, “முறையான மாவட்ட நிர்வாக அனுமதி ஏதும் பெறப்படவில்லை. பொதுமக்களை ஏற்றிச் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பாகும். எனவே மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் இயக்கும் நிர்வாகத்தினர் அனுமதி பெற்று இருப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு அனுமதி பெற்று இருந்தால் அதனைக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்” என்றார்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்: ஹெலிகாப்டர் சுற்றுலா செல்வதற்காக பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர். நேற்று சீல் வைக்கப்பட்டு சேவை நிறுத்தப்பட்டதால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திரும்பி வழங்கப்பட்டது.