சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாடுகளுக்கு பூஜை நடத்திய மக்கள், அவற்றுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஊட்டி மகிழ்ந்தனர்.
பொங்கல் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உழவுக்கு உற்ற துணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, மாடு வளர்க்கும் விவசாயிகளும், உரிமையாளர்களும் நேற்று காலையிலேயே மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்தனர். பின்னர் மாடுகளை குளிப்பாட்டி, மலர்மாலை அணிவித்து, திருநீரு, குங்குமம் பூசினர். மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசியும், சலங்கை, புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறும் அணிவித்தனர். மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பூஜை செய்து, பொங்கல், வாழைப்பழம், கரும்புகள் ஊட்டினர்.
சென்னையில் தியாகராய நகர் போக் சாலை, வால்டாக்ஸ் சாலை, பாரிமுனை, பெரம்பூர், எம்கேபி நகர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மாடு வளர்ப்பவர்கள் மாட்டுப் பொங்கல் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், வேளச்சேரி, சேலையூர், ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், பட்டாபிராம், செங்குன்றம், புழல், பூந்தமல்லி, மாதவரம், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும், அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் மாட்டுப் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகள், சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
சென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கியமான கோயில்களின் கோசாலைகளில் மாடுகளுக்கு நிவேதனங்கள் படைத்தும், தீபாராதனை காண்பித்தும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.