போபால்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் “இந்திய அரசுக்கு எதிராகப் போராடுதல்” என்ற கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ராகுல் காந்தி தனது தேச விரோத கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், “ராகுல் காந்தி தனது தேச விரோத கருத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசின் கொள்கைகள் குறித்து ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆனால், நாட்டுக்கே எதிராக போராடுகிறோம் என கூறுவது தேச விரோதம். இத்தகைய கருத்துகளை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு ராகுல் காந்தி வந்த பிறகு, அக்கட்சி தனக்கென ஒரு தனி தேச விரோத அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த காலங்களிலும் கூட, ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகம் திறப்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி, “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அண்மையில் பேசும்போது, ‘1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட போதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது’ என்று கூறி இருந்தார். ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத் துரோகமாகும். சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். மோகன் பாகவத் பேசும்போது, அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது.
பாஜக, ஆர்எஸ்எஸ் என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அவர்கள் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி உள்ளனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக மட்டுமல்லாமல் இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறோம். குற்றங்களை விசாரிக்க வேண்டிய மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகின்றன. பாஜகவின் கருத்துகள் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி இருக்கின்றன. நமது நாட்டில் இருவிதமாக கருத்து மோதல்கள் இருக்கின்றன. அவை அரசியலமைப்பு மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே ஏற்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா பேரவைத் தேர்தலில் தகவல்களைத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர்” என்ற ராகுல் காந்தியின் இந்தக் கருத்தை விமர்சித்த பாஜக தலைவர் ஜெபி நட்டா, “பலவீனமான இந்தியாவை விரும்பும் சக்திகளை ஊக்குவித்த வரலாற்றை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது” என்று சாடினார். மேலும் அவர், “அவர்களின் அதிகார பேராசை, நாட்டின் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்தது, நம்பிய மக்களின் முதுகில் குத்தியது. ஆனால், இந்திய மக்கள் புத்திசாலிகள். ராகுல் காந்தியையும் அவரது அழுகிய சித்தாந்தத்தையும் எப்போதும் நிராகரிப்பதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர்” என்று கூறி இருந்தார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிராக எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அரசியலமைப்பின் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்ற கட்சி, இப்போது, ”நாங்கள் இப்போது பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாது இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுகிறோம்” என்று கூறுகிறது. அப்படியானால், ராகுல் காந்தி எதற்காக அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருக்கிறார்?” என கேள்வி எழுப்பி இருந்தார்.
பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “ராகுல் காந்தியின் கருத்து ஒவ்வொரு குடிமகனையும் காயப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர். இந்திய எதிர்க்கட்சித் தலைவரான அவர், நாம் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று கூறுகிறார்.
இந்தியாவுக்கு விசுவாசமான மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் தேவை. ராகுல் காந்தியின் வார்த்தைகள், செயல்கள் மற்றும் நம்பிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை புண்படுத்துகின்றன. ராகுல் காந்தி இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது இது முதல் முறையல்ல. ‘இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம்’ என்று நீங்கள்(ராகுல் காந்தி) கூறி இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.