மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவரை கைது செய்ய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மண்டலம் 9-ன் துணை காவல் ஆணையர் (DCP) தீட்சித் கெடம், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் படிக்கட்டுக்கள் வழியாக வீட்டிற்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இது ஒரு கொள்ளை முயற்சி என்று தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரைக் கைது செய்ய 10 குழுக்கள் களத்தில் உள்ளன. வெவ்வேறு திசைகளில் இந்த குழுக்கள் செயல்படுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவரை விரைவில் கைது செய்ய நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அவர் கைது செய்யப்பட்டவுடன், கூடுதல் விவரங்களை வெளியிட முடியும்.” என தெரிவித்துள்ளார்.
காவல்துறை அறிக்கை: முன்னதாக சைஃப் அலி கானின் மகன் ஜஹாங்கீரின் வீட்டில் உள்ள படுக்கையறையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பாந்த்ரா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வீட்டு வேலை செய்யும் அரியாமா பிலிப்ஸ் என்கிற லிமா, எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, நடிகர் சைஃப் அலி கான் தலையிட்டதாகவும், அப்போது, அடையாளம் தெரியாத நபர் சைஃப் அலி கானை கூர்மையான பொருளால் தாக்கி காயப்படுத்தியதாகவும், இந்த சம்பவத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணியும் காயமடைந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று (ஜன.16) அதிகாலை 2:30 மணியளவில் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள ‘சத்குரு ஷரன்’ என்ற தனது இல்லத்தில் இருந்தபோது, சைஃப் அலி கான் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தெரிவித்த லீலாவதி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி, “சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயங்கள் இருந்தன. ஒரு காயம் அவரது முதுகுத் தண்டவடத்தின் அருகே உள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறோம். அவருக்கு நரம்பியல் அறுவை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மடிக் அறுவை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி உள்ளிட்டோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காயத்தின் தன்மை பற்றி மேலதிக தகவல்களைத் தெரிவிக்க முடியும்.” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகு சைஃப் அலிகான், ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டதாக அவரைச் சார்ந்தோர் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “சைஃப் அலி கான் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். அவர் தற்போது குணமடைந்து வருகிறார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லீலாவதி மருத்துவமனையின் மருத்தவர் நிராஜ் உத்தமணி, மருத்துவர் நிதின் டாங்கே, மருத்தவர் லீனா ஜெயின் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். அவர் நலம் பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி.” என்று தெரிவித்தனர்.